ஏடிஎம் இயந்திரத்தை கியாஸ் வெல்டிங் மூலம் தகர்த்து ரூ.23 லட்சம் கொள்ளை..!
கிருஷ்ணகிரி குப்பம் தேசிய நெடுஞ்சாலையில் மாவட்ட ஆசியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் உள்ளது. இதன் எதிரே வெள்ளாள ராஜா என்பவருக்கு சொந்தமான கட்டிடத்தில் எஸ்பிஐ வங்கியின் ஏடிஎம் மையம் உள்ளது. இதன் அருகே மளிகைக் கடை ஒன்றும், மற்றொரு வங்கியின் ஏடிஎம் மையமும் உள்ளது.
இந்நிலையில், எஸ்பிஐ வங்கியின் ஏடிஎம் மையத்தில் உள்ள இயந்திரத்தில் நேற்று மாலை வங்கி ஊழியர்கள் பணத்தை நிரப்பிச் சென்றனர். ஏற்கெனவே அந்த இயந்திரத்தில் பணம் இருந்துள்ளது. இந்த நிலையில் நேற்று இரவு ஏடிஎம் மையத்திற்குள் வந்த மர்ம நபர்கள், அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா மீது கருப்பு நிற மையை ஸ்பிரே செய்துவிட்டு, உள்ளே நுழைந்துள்ளனர். பின்னர் ஏடிஎம் இயந்திரத்தை கியாஸ் வெல்டிங் மூலம் தகர்த்து அதிலிருந்த பணத்தைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
இந்நிலையில் இன்று (21-ம் தேதி) காலை 8 மணிக்கு ஏடிஎம் மையத்திற்கு வந்த பொதுமக்கள் அங்கு, ஏடிஎம் இயந்திரம் உடைக்கப்பட்டுள்ளது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக இதுகுறித்து மகாராஜா கடை போலீஸாருக்கும், வங்கி நிர்வாகத்திற்கும் தகவல் அளிக்கப்பட்டது. இதையடுத்து அங்கு வந்த போலீஸார் விசாரணை நடத்தினர்.
ஏடிஎம் மையத்தில் இருந்த மொத்த பணம் இருப்பு, வாடிக்கையாளர்கள் எவ்வளவு தொகை எடுத்துள்ளனர் உள்ளிட்ட விவரங்களை ஊழியர்கள் ஒப்பிட்டு வருகின்றனர். போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில் ரூ.23 லட்சம் கொள்ளை போனதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இருப்பினும் வங்கி ஊழியர்கள் ஆய்வுக்குப் பின்பு கொள்ளையடிக்கப்பட்ட தொகை எவ்வளவு என்பது குறித்தான முழு விவரமும் தெரியவரும். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.