கழிவறைக்கு அனுமதி மறுத்ததால் ரூ.1.65 லட்சம் அபராதம்!

கேரள மாநிலம் ஏழம்குளம் பகுதியை சேர்ந்தவர் ஜெயகுமாரி. இவர் கடந்த 2024ம் ஆண்டு மே 8ம் தேதி காரில் பயணம் மேற்கொண்டிருந்தார். அப்போது கோழிக்கோடு பகுதியில் உள்ள ஒரு பெட்ரோல் பங்க்கில் எரிபொருள் நிரப்புவதற்காக காரை நிறுத்தினார். அந்த சமயத்தில் கழிவறையை பயன்படுத்தியாக வேண்டிய சூழல் அவருக்கு ஏற்பட்டது.
ஆனால் அந்த பெட்ரோல் பங்க்கில் கழிவறையை மூடி வைத்திருந்தனர். எனவே கழிவறையை திறக்கும்படி, பெட்ரோல் பங்க் ஊழியர்களிடம் ஜெயகுமாரி கூறினார். ஆனால் அவர்கள் கழிவறையை திறக்கவில்லை. அதற்கு மாறாக பெட்ரோல் பங்க் ஊழியர்கள், ஜெயகுமாரியை மோசமான வார்த்தைகளில் பேசியுள்ளனர்
இதன் காரணமாக ஜெயகுமாரி காவல் துறையின் உதவியை நாடினார். இதன் பேரில் காவல் துறை அதிகாரிகள் அங்கு வந்து விசாரணை நடத்தினர். காவல் துறை அதிகாரிகள் வருகைக்கு பின்னர்தான், பெட்ரோல் பங்க் ஊழியர்கள் கழிவறையை திறந்து விட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் ஜெயகுமாரி வழக்கு தொடர்ந்தார்.
பத்தினம்திட்டா நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில் தற்போது அதிரடியாக தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பில், பெட்ரோல் பங்க்கின் உரிமையாளரான ஃபாத்திமா ஹன்னா 1.65 லட்ச ரூபாயை, ஜெயகுமாரிக்கு இழப்பீடாக வழங்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
இதில், 1.50 லட்ச ரூபாய் இழப்பீடு ஆகும். எஞ்சிய 15 ஆயிரம் ரூபாய் வழக்கு செலவுகளுக்காக வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. நுகர்வோர்களுக்கு அடிப்படை வசதிகளை வழங்க மறுக்கும் அத்தனை பெட்ரோல் பங்க்குகளுக்கும் இந்த தீர்ப்பு ஒரு பாடமாக அமைந்துள்ளது.