1. Home
  2. தமிழ்நாடு

மேலும் 7 லட்சம் பெண்களுக்கு ரூ.1,000 மகளிர் உரிமை தொகை..!

1

தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமை திட்டம் கடந்த செப்டம்பர் 15-ந்தேதி முதல் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இதில் 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பேருக்கு மாதந்தோறும் ரூ.1000 அவரவர் வங்கி கணக்குக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் விண்ணப்பித்து மனு நிராகரிக்கப்பட்ட 11 லட்சத்து 85 ஆயிரம் பேர் தங்களுக்கும் ரூ.1000 பணம் வழங்க வேண்டும் என்று கேட்டு மேல்முறையீடு செய்திருந்தனர். இதில் தகுதியான மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு வந்தது. இதில் 7 லட்சம் மனுக்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இந்த தகுதி படைத்த மகளிருக்கு வருகிற 10-ந் தேதி ரூ.1000 வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதையொட்டி ஒவ்வொரு மாவட்டத்திலும் இன்று கலெக்டர் தலைமையில் விழா நடத்த ஏற்பாடு நடந்து வருகிறது. சென்னையில் கலைவாணர் அரங்கில் இன்று நடைபெறும் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு மகளிருக்கு ரூ.1000 வழங்கும் 2-ம் கட்ட விரிவாக்கத் திட்டத்தை தொடங்கி வைக்கிறார்.

தீபாவளி பண்டிகை 12-ம் தேதி வருவதையொட்டி 10-ம் தேதி அவரவர் வங்கி கணக்கில் பணம் செலுத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்திருந்த நிலையில் நேற்று முன்தினமே தகுதியான பயனாளிகளின் செல்போனுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்பட்டது. இதைத்தொடர்ந்து நேற்று சோதனை அடிப்படையில் புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள மகளிருக்கு ரூ.1000 அனுப்பும் பணி தொடங்கியது. இதன் மூலம் மொத்தம் 1 கோடியே 11 லட்சத்து 60 ஆயிரம் மகளிர்கள் கலைஞர் உரிமைத் திட்டத்தின் மூலம் பயன் அடைகிறார்கள் என்று அமைச்சர் உதயநிதிஸ்டாலின் நேற்று தெரிவித்தார். 

சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் அமைச்சர் சேகர்பாபு நடத்திய நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று பேசும்போது கூறியதாவது:- மகளிர் உரிமைத் தொகை கிடைக்க பெறாதவர்கள் மறுபடியும் விண்ணப்பித்ததில் மீண்டும் அவர்களது மனு பரிசீலிக்கப்பட்டது. அதில் புதிதாக 7 லட்சம் மகளிர் அந்த திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளனர். இன்று காலை அவர்களுக்கு சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதை வழங்க உள்ளார்.

இப்போது இந்த திட்டத்தில் மொத்த பயனாளிகள் 1 கோடியே 11 லட்சத்து 60 ஆயிரம் மகளிர் பயன்பெற உள்ளனர். மாதம் 1000 ரூபாய் வீதம் வருடத்துக்கு 12 ஆயிரம் ரூபாய் கிடைக்கும். இந்த திட்டத்தை கழக நிர்வாகிகள் பொதுமக்கள் மத்தியில் கொண்டு சென்று பேசிக்கொண்டே இருக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Trending News

Latest News

You May Like