வன்னியர் சங்கத்திடமிருந்து ரூ.100 கோடி கோவில் நிலம் மீட்பு..!

பரங்கிமலையில், இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான காசிவிஸ்வநாதர் கோவில், 43 ஆண்டுகளுக்கு முன் வடபழனி ஆண்டவர் கோவிலுடன் இணைக்கப்பட்டது. இந்த கோவிலுக்கு சொந்தமாக, செங்கல்பட்டு மாவட்டம், பல்லாவரம் தாலுகா, பரங்கிமலை, பட் சாலையில் 39,531 சதுர அடி இடமும் அதில் 2,179 சதுர அடி இடத்தில் கட்டடம் ஒன்றும் உள்ளது.
இந்த இடம், 1979ல் சுகந்தமணி அம்மாள் என்பவருக்கு, மாதம் 400 ரூபாய் என நிர்ணயம் செய்து, அடிமனை வாடகைக்கு விடப்பட்டது. சுகந்தமணி அம்மாள் என்பவருக்கு பின் பலர் கைமாறியது. பின், இந்த இடத்தில் மாநில வன்னியர் சங்கத் தலைமை செயலகம் என்ற பெயரில், வன்னியர் சங்கம் செயல்படத் துவங்கியது. ஆனால், முதன்முதலில் மனை வாடகைக்கு எடுத்த சுகந்தமணி அம்மாளைத் தவிர, தொடர்ந்து இந்த இடத்தை அனுபவித்து வந்த யாரும், கோவில் நிர்வாகத்தை அணுகி முறைப்படி அனுமதி பெறவில்லை; அடிமனை வாடகையையும் கட்டவில்லை. இந்த கோவில் நிலம், வருவாய் பதிவேட்டில், காலம் கடந்த குத்தகை நிலம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
காலப்போக்கில் இவ்விடம், கோவில் பயன்பாட்டிற்கு உபயோகப்படாமல், பிற நபர்களால் ஆக்கிரமிக்கப்பட்டது. அந்த இடத்தில், ‘வன்னியர் சங்கம்’ பெயரில், கட்டடம் கட்டப்பட்டது. நிலம் ஆக்கிரமிக்கப்பட்டதோடு, ஒரு காசு கூட, அரசுக்கு குத்தகை தொகையும் செலுத்தப்படாமல் அனுபோகத்தில் இருந்தது.
கடந்த 2010, ஜூலை, 15ல், ஆக்கிரமிப்பை அகற்றி சீல் வைத்த அதிகாரிகள் மீது கடும் தாக்குதல் நடத்தப்பட்டது.
சம்பந்தப்பட்ட நிலத்திலிருந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற, பல்லாவரம் தாலுகா அலுவலகத்தில் இருந்து, நவ., 28, மார்ச் 6 ஆகிய தேதிகளில், சங்கத்தினருக்கு ‘நோட்டீஸ்’ வழங்கப்பட்டது. ஆக்கிரமிப்பு செய்தோர், ஆக்கிரமிப்புகளை அகற்ற முன்வரவில்லை. இதையடுத்து, மாவட்ட நிர்வாகம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. பல்வேறு நீதிமன்றங்களில், வன்னியர் சங்கம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
இந்நிலையில், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் உத்தரவின்படி, பல்லாவரம் தாசில்தார் ஆறுமுகம் தலைமையிலான வருவாய்த் துறை அதிகாரிகள், மேற்கண்ட இடத்திற்கு நேற்று சென்றனர். அந்த இடத்தையும், அதில் கட்டப்பட்டுள்ள கட்டடத்தையும் பூட்டி ‘சீல்’ வைத்தனர். ‘மீட்கப்பட்ட கோவில் நிலத்தின் மதிப்பு 100 கோடி ரூபாய்’ என அதிகாரிகள் கூறினர்.
அதிகாரிகளின் இந்நடவடிக்கையால், அப்பகுதியில் போராட்டம் நடத்தாமல் இருக்க முன்னெச்சரிக்கையாக ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டனர்.
அவ்விடத்துக்கு வந்த முன்னாள் மத்திய இணை அமைச்சர் மூர்த்தி, கடந்த, 40 ஆண்டுகளாக இந்த நிலத்தை, வன்னியர் சங்கம் நிர்வகித்து வருகிறது. பள்ளி, கல்லூரி மாணவர் தங்கும் விடுதியாக செயல்படுகிறது. எந்தவித முன்னறிவிப்பும் இன்றி, வருவாய்த் துறையினர் ‘சீல்’ வைத்துள்ளனர். பல ஆண்டுகள் அனுபவத்தில் உள்ள நிலம் என்ற அடிப்படையில், வன்னியர் சங்கத்திற்கு இந்த நிலத்தை குத்தகைக்கு விடவேண்டும். அதற்கான தொகையை, எந்த துறையிடம் செலுத்த வேண்டும் என தெரிவித்தால், அதை செலுத்துவதற்கு தயாராக இருக்கிறோம் என்று கூறினார்.
மீட்கப்பட்ட இடத்தின் ஒரு பகுதியை சென்னை மெட்ரோ ரயில் பணிகளுக்கு பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக, செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் தெரிவித்துள்ளார்.