முகக்கவசம் அணியாத பேருந்து பயணிகளிடம் அபராதமாக ரூ.1¼ லட்சம் வசூல் !

திண்டுக்கல் மாவட்டத்தில் முகக்கவசம் அணியாத பேருந்து பயணிகள் மற்றும் கடை உரிமையாளர்களுக்கு உள்ளாட்சித்துறை அதிகாரிகள் அபராதம் விதித்தனர்.
கொடிய கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில், ஒவ்வொரு தனி மனிதரும் முகக்கவசம் அணிய வேண்டும், தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கட்டுப்பாடுகளை மத்திய, மாநில அரசுகள் அறிவித்துள்ளன.
இதனை மீறி, திண்டுக்கல் நகரில் பேருந்துகளில் முகக்கவசம் அணியாமலும், சமூக இடைவெளியை கடைபிடிக்காமலும், மக்கள் பயணம் செய்து வந்தனர். இந்த நிலையில், மாவட்டம் முழுவதும் சோதனை நடத்தி முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கும்படி மாவட்ட ஆட்சியர் விஜயலட்சுமி உத்தரவிட்டார்
.
இதையடுத்து உள்ளாட்சி அமைப்பினர் மற்றும் சுகாதாரத்துறையினர் இணைந்து மாவட்டம் முழுவதும் சோதனை நடத்தினர்.அப்போது, திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் சிலர் முகக்கவசம் அணியாமல் சிலர் அமர்ந்து இருந்தனர். அவர்களுக்கு தலா ரூ.200 அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், பேருந்து நிலையத்தில் முகக்கவசம் அணியாமல் காத்திருந்த பயணிகள் மற்றும் கடை உரிமையாளர்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டது.
அந்த வகையில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் பேருந்து பயணிகளிடம் சுமார் ரூ.1¼ லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.