தப்பிக்க முயன்ற ரவுடி...சுட்டுப் பிடித்த போலீஸார்..!
நாகர்கோவிலைச் சேர்ந்தவர் ஆல்வின் (40). கோவையில் வசித்து வரும் இவர் மீது ரேஸ்கோர்ஸ் உள்ளிட்ட காவல் நிலையங்களில் பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன. இந்நிலையில், ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தில் இவர் மீது பதிவாகியிருந்த கொலை வழக்கில் பிடி வாரன்ட் பிறப்பிக்கப்பட்டிருந்தது. அதில், ஆல்வின் ஆஜராகாமல் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வந்தார்.
இந்நிலையில் ரவுடி ஆல்வின் கோவை அவிநாசி சாலை கொடிசியா மைதானம் அருகே பதுங்கியிருப்பதாக இன்று அதிகாலை போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் காட்டூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் கார்த்திகேயன், தலைமை காவலர்கள் ராஜ்குமார், சந்திரசேகர் ஆகியோர் இன்று அதிகாலை கொடிசியா மைதானத்துக்கு சென்று ரவுடி ஆல்வினை பிடிக்க முயன்றனர். அப்போது அவர் கத்தியால் காவலர் ராஜ்குமாரை வெட்டிவிட்டு தப்பிக்க முயன்றார்.
அதைத் தொடர்ந்து உதவி ஆய்வாளர் கார்த்திகேயன் தன்னிடம் இருந்து கைத்துப்பாக்கியால் ரவுடி ஆல்வினை நோக்கிச் சுட்டார். இதில், அவரது இரண்டு கால்களிலும் குண்டு பாய்ந்தது. இதையடுத்து ரவுடி ஆல்வின் அந்த இடத்திலேயே சுருண்டு விழுந்தார். பின்னர் போலீஸார் அவரை மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் தொடர்பாக துணை ஆணையர் ஸ்டாலின், உதவி ஆணையர் பார்த்திபன் உள்ளிட்டோர் சம்பவ இடத்தைப் பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.