ரவுடி கருக்கா வினோத் வாக்குமூலம்..!
ரவுடி கருக்கா வினோத் வாக்குமூலம்:
மருத்துவராக வேண்டும் என்ற தனது மகனின் கனவு நீட் தேர்வால் பறிபோகும் எனத் தாம் கருதியதாக ரவுடி கருக்கா வினோத் கூறியுள்ளார்.அண்மையில் சென்னையில் உள்ள ஆளுநர் மாளிகை மீது இவர் பெட்ரோல் குண்டுகளை வீசினார். இதையடுத்து காவல்துறை அவரைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டது.
அப்போது அளித்த வாக்குமூலத்தில், நீட் தேர்வை நீக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டதாக இந்து தமிழ் ஊடகச் செய்தி தெரிவிக்கிறது.நீட் தேர்வு காரணமாக மாணவர்கள் உயிரை மாய்த்துக்கொள்வது தொடர்கதையாகிவிட்டது என்றும் இதனால் தாம் கடும் மன உளைச்சலுக்கு ஆளானதாகவும் 42 வயதான கருக்கா வினோத் கூறியுள்ளார்.
“எனது மகன் இப்போது ஆறாம் வகுப்பு படிக்கிறார். நீட் தேர்வு இருந்தால் அவன் எப்படி மருத்துவராக முடியும்? எனவேதான் அத்தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்ற ஆதங்கத்தில் பாஜக அலுவலகம் முன்பு பெட்ரோல் குண்டு வீசினேன். தற்போது ஆளுநர் மாளிகை முன் வீசினேன்,” என்று கருக்கா வினோத் தனது வாக்குமூலத்தில் குறிப்பிட்டதாக ஊடகச் செய்தி தெரிவிக்கிறது.
இதற்கிடையே, ஆளுநர் மாளிகை அருகே பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் கருக்கா வினோத்துக்கு வழங்கப்பட்ட பிணையை ரத்து செய்ய காவல்துறை நீதிமன்றத்தில் வவலியுறுத்தி உள்ளது. மேலும், கருக்கா வினோத்தை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்க காவல்துறை ஆலோசித்து வருவதாகவும் கூறப்படுகிறது.