1. Home
  2. தமிழ்நாடு

மீண்டும் ராக்கிங் கொடுமை..! கோவையில் சீனியர் மாணவரை கொடூரமாக தாக்கிய ஜூனியர் மாணவர்கள்.!

1

கோவை குனியமுத்தூர்பகுதியில் இயங்கி வரும் கல்லூரியில் சீனியர் எம்.ஏ கிரிமினாலஜி படிக்கும் மாணவரை  அதே கல்லூரியில் பி இ மற்றும் பி டெக் படிக்கக்கூடிய 13 முதலாமாண்டு மாணவர்கள் தாக்கிய வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

அந்த வீடியோவில், சீனியர் மாணவர் ஒருவரை மேல் சட்டை இல்லாமல், மண்டியிட வைத்தும் தாக்கியுள்ளனர். இந்தத் தாக்குதலின்போது, சீனியர் மாணவரை மண்டியிடச் செய்து, கைகளை உயர்த்தி வைக்கச் சொல்லி, உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் கொடுமைப்படுத்தியுள்ளனர். தாக்குதலில் பாதிக்கப்பட்ட மாணவர் இரத்தக் காயங்களுடன் வலியால் கதறியபோதும், ஜூனியர் மாணவர்கள் தாக்குதலை நிறுத்தாமல் தொடர்ந்து அடித்துள்ளனர். இந்தக் கொடூரச் செயலின் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி, பார்வையாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடத்திய  கல்லூரி நிர்வாகம், தாக்குதலில் ஈடுபட்ட முதலாம் ஆண்டு மாணவர்கள் 13 பேரை உடனடியாக இடைநீக்கம் செய்துள்ளது.

மேலும், இது தொடர்பாக உரிய சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் கல்லூரி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. தாக்கப்பட்ட மாணவரின் உடல்நிலை குறித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், அவரது நிலை தற்போது சீராக உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தச் சம்பவம், கல்லூரி வளாகங்களில் மாணவர்களிடையே அதிகரித்து வரும் வன்முறைக் கலாச்சாரத்தை மீண்டும் ஒருமுறை அம்பலப்படுத்தியுள்ளது. கல்வி நிறுவனங்கள் அறிவைப் பரப்பும் இடங்களாக இருக்க வேண்டுமே தவிர, வன்முறையை வளர்க்கும் களங்களாக மாறிவிடக் கூடாது என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

மேலும் பெற்றோர்களை நேரில் வரவழைத்து அவர்களிடம் உரிய விசாரணை நடத்தப் போவதாகவும் கல்லூரி நிர்வாகம் கூறியுள்ளது.  இதனிடையே சீனியர் மாணவரை ஜூனியர் மாணவர்கள் தாக்கியது ஏன் என தகவல் வெளியாகியுள்ளது. அதன் படி ஜூனியர் மாணவர்களின் அறையில் இருந்த பணத்தை சீனியர் மாணவர் எடுத்ததாக கூறி சந்தேகிக்கப்பட்டு சீனியர் மாணவரை தாக்கி இருக்கின்றனர்

Trending News

Latest News

You May Like