அமெரிக்க அதிபர் தேர்தலில் இருந்து ராபர்ட் எஃப். கென்னடி விலகல்..!
அரிசோனா மாகாணத்தில் போட்டியிடுவதாக அறிவித்து இருந்த சுயேட்சை அதிபர் வேட்பாளர் ராபர்ட் எஃப். கென்னடி தேர்தல் போட்டியில் இருந்து விலகிக் கொள்வதாக அறிவித்து இருக்கிறார். இதற்காக ஆவணங்களை அவர் ஏற்கனவே தாக்கல் செய்துவிட்டதாக அரிசோணா மாகாண செயலாளர் அட்ரியன் ஃபோன்டஸ் தெரிவித்தார்.
இன்றிரவு நடைபெற இருந்த தேர்தல் பரப்புரையில் நாட்டு மக்களிடையே உரையாற்ற ராபர்ட் எஃப். கென்னடி முடிவு செய்திருந்தார். ராபர்ட் எஃப். கென்னடிக்கு ஆதரவு தெரிவித்து இருந்த சூப்பர் பேக் அமைப்பு ஒன்று கூறும் போது, கென்னடி மற்றும் டொனால்டு டிரம்ப் இடையே வேலைவாய்ப்பு தொடர்பாக ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தது.
அந்த ஒப்பந்தத்தின் படி டிரம்ப் தலைமையிலான நிர்வாகத்தில் கென்னடிக்கு பொறுப்பு வழங்க வேண்டும். ஏற்கனவே இது குறித்து பேசிய டிரம்ப், கென்னடி தேர்தல் போட்டியில் இருந்து விலகினால் அவருக்கு தனது நிர்வாகத்தின் கீழ் அமையும் அரசாங்கத்தில் பொறுப்பு வழங்குவதாக தெரிவித்து இருந்தார்.
அதன்படி கென்னடி, தனது கூட்டணியில் உள்ள துணை அதிபருக்கான சுயேட்சை வேட்பாளர் மற்றும் 11 வேட்பாளர்கள் தேர்தல் போட்டியில் இருந்து விலகுவதாக நோட்டீஸ் தாக்கல் செய்துள்ளனர் என்று அரிசோனாவின் ஃபாண்டெஸ் தெரிவித்துள்ளார்.