1. Home
  2. தமிழ்நாடு

கவர்னர் பதவியை வகிக்க தகுதியற்றவர் ஆர்.என்.ரவி : ஜனாதிபதிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பரபரப்பு கடிதம்..!

1

 ஜனாதிபதிக்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின் 15 பக்கம் கடிதம் அனுப்பியுள்ளது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமைச்சர் செந்தில் பாலாஜியை அமைச்சரவையை விட்டு நீக்குவதாக கவர்னர் சமீபத்தில் அறிவித்தார். இது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் தலையீட்டால் அந்த உத்தரவை நிறுத்தி வைப்பதாக அன்றிரவே முதல்வருக்கு கவர்னர் கடிதம் எழுத பரபரப்பு சற்றே அடங்கியது.

அப்போது, அட்டர்னி ஜெனரலின் ஆலோசனையைப் பெற்று அதன் அடிப்படையில் செயல்படுமாறு கவர்னருக்கு மத்திய அமைச்சர் அமித் ஷா அறிவுறுத்தினார். இதையடுத்து அதற்கான முயற்சியில் கவர்னர் இறங்கினார். இந்நிலையில், கவர்னருக்கு தமிழக சட்ட அமைச்சர் எஸ்.ரகுபதி கடிதம் எழுதியிருந்தார். அதில் நிலுவையில் உள்ள மசோதாக்களுக்கு விரைவாக ஒப்புதல் அளிக்கும்படியும், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான வழக்குகளில் நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு அனுமதியளிக்கும்படியும் கேட்டிருந்தார்.

ஆனால், இதற்கான கோப்புகள் வரவில்லை என்று கவர்னர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை மறுத்த சட்ட அமைச்சர் ரகுபதி, கவர்னர் மாளிகையில் கோப்புகளை பெற்றுக் கொண்டு ஒப்புதல் அளித்தற்கான ஆதாரங்களையும் வெளியிட்டார். இந்தச்சூழலில், கவர்னர் ஆர்.என்.ரவி மீது புகார் தெரிவித்து, ஜனாதிபதிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். கவர்னர் - திமுக அரசு இடையே பனிப்போர் முற்றிவரும் நிலையில், கவர்னர் ஆர்.என்.ரவி மீது புகார் தெரிவித்து, ஜனாதிபதிக்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின் 15 பக்கம் கடிதம் அனுப்பியுள்ளார்.

முன்னதாக டெல்லியில் முகாமிட்டுள்ள கவர்னர் ஆர்.என்.ரவி, நேற்று முன்தினம் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து பேசினார். வரும் நாட்களில் மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மெக்வால், அட்டர்னி ஜெனரல் வெங்கட்ரமணி ஆகியோரை சந்தித்து செந்தில் பாலாஜி விவகாரம் தொடர்பாக கவர்னர் ஆலோசனை நடத்த உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் கவர்னர் மீதான 15 பக்க புகார் கடிதத்தை ஜனாதிபதிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அனுப்பியுள்ளார். அதில், கவர்னர் என்பவர், முக்கியமான அரசியலமைப்பு கடமைகளைச் செய்பவராகவும், பாரபட்சமற்றவராகவும், அப்பழுக்கற்ற நேர்மையான நபராகவும் இருக்க வேண்டும். மக்களாட்சி தத்துவம் என்பது நமது அரசியல் சாசனத்தின் உயிர்நாடி என்றும், அந்த மக்களால் தேர்தெடுக்கப்பட்ட அரசை நிறுவுவதற்காகவே, நமது சுதந்திரப் போராட்ட வீரர்கள் காலனிய சக்திகளை எதிர்த்துப் போராடி, தங்கள் இன்னுயிரைத் தியாகம் செய்தனர்.

அரசியல் சாசனத்தின் மீதும், அது பிரதிநிதித்துவப்படுத்தும் கொள்கைகள் மீதும் கவர்னருக்கு முழு நம்பிக்கை இருக்க வேண்டும். அரசியலமைப்பின் லட்சியங்கள் முகவுரையில் தொகுக்கப்பட்டுள்ளன. இந்தியா ஒரு இறையாண்மை மிக்க, சோசலிச, மதச்சார்பற்ற, ஜனநாயக குடியரசு நாடு. இந்த அடிப்படைக் கொள்கைகளில் ஏதேனும் ஒன்றில் நம்பிக்கை இல்லாத கவர்னர், அரசியலமைப்பு பதவியை வகிக்கத் தகுதியற்றவர். வகுப்புவாத வெறுப்பை தூண்டிவிட்டு மாநிலத்தின் அமைதிக்கு அச்சுறுத்தலாக இருக்கிறார் கவர்னர். அமைச்சரவை நீக்குவது தொடர்பான கவர்னரின் பரிந்துரை சட்டவிரோதமானது, அரசியலமைப்பை மீறி செய்லபட்டு வருகிறார்.

அரசியல்வாதியாக மாறும் ஒரு கவர்னர், அப்பதவியில் தொடரவே கூடாது என்றும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசின் கொள்கை, செயல்பாடுகள், முடிவுகளுக்கு சவால்விடும் வகையில் கவர்னர் அரசியல் களத்தில் இறங்க வேண்டும் என்பது அரசியல் சாசனத்தின் நோக்கமல்ல. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசின் கொள்கைக்கு கவர்னர் வெளிப்படையாக முரண்படுவது அல்லது சட்டமன்றம் நிறைவேற்றும் சட்டமுன்வடிவுகளுக்கு ஒப்புதல் வழங்குவதில் தேவையற்ற காலதாமதம் செய்து முட்டுக்கட்டை போடுவது அல்லது கூட்டாட்சி மற்றும் மதச்சார்பின்மை போன்ற அரசியலமைப்பின் அடிப்படை அம்சங்களுக்கு எதிராகச் செயல்படுவது போன்றதொரு சூழ்நிலையை அரசியலமைப்பை உருவாக்கியவர்கள் ஒருபோதும் கற்பனை செய்திருக்க மாட்டார்கள்.

குற்றவாளிகள் மீது வழக்கு தொடர அனுமதி வழங்குவதில் கவர்னர் தேவையற்ற தாமதம் செய்கிறார். சட்ட முன்வடிவுகளுக்கு ஒப்புதல் அளிப்பதில் கவர்னர் ரவி காலதாமதம் செய்கிறார். கவர்னர் ஆர்.என். ரவி, தனது நடத்தை மற்றும் செயல்பாடுகள்மூலம், தான் ஒருதலைப்பட்சமானவர் மற்றும் கவர்னர் பதவியை வகிக்க தகுதியற்றவர் என்பதை நிரூபித்துள்ளது. 

தமிழக மக்களுக்கு எது நல்லது என்பதை முடிவு செய்ய ஆர்.என். ரவி, தமிழகத்தில் எந்தத் தேர்தலிலும் போட்டியிட்டு வெற்றி பெறவில்லை என்பதை அவர் மறந்துவிட்டார். அவர் மக்களின் தலைவர் அல்ல; நியமனம் செய்யப்பட்ட ஒரு நிர்வாகி. 5-1-2023 அன்று நடைபெற்ற காசி தமிழ் சங்கமம் என்ற விழாவில், மீண்டும் தமிழ் மக்களையும், பண்பாட்டையும், இலக்கியத்தையும், திராவிடக் கருத்தியலையும், அரசியலையும் இழிவுபடுத்தும் வகையிலும், அவதூறாகவும் அறிக்கைகளை வெளியிட்டார். 

மேலும் கவர்னரின் செயல்பாடுகள் தொடர்பாக தனது 10-1-2023 நாளிட்ட கடிதத்தினை 12-1-2023 அன்று டெல்லியில், தமிழக அரசின் சட்ட அமைச்சர் மற்றும் மூத்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதியிடம் அளித்ததை நினைவுகூர்வதாகவும், அதன் தொடர்ச்சியாக, தமிழகம் மற்றும் தமிழக மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பொருள் குறித்து ஜனாதிபதியின் கவனத்திற்குக் கொண்டு வர விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார். 

மத்திய ஆளும் கட்சியை எதிர்க்கும் ஒரு கட்சியின் கைகளில் மாநில ஆட்சி இருக்கும்போது, மாநிலத் தலைநகர்களில் அமர்ந்துகொண்டு, அந்த மாநில அரசை கவிழ்க்கும் வாய்ப்பைத் தேடும் கவர்னரை வெறும் மத்திய அரசின் முகவராகத்தான் கருதமுடியும். கவர்னரின் இத்தகைய செயல் நமது கூட்டாட்சித் தத்துவத்தை சிதைத்து, இழிவுபடுத்தி, இந்திய ஜனநாயகத்தின் அடிப்படைத் தத்துவங்களையே அழித்துவிடும். தமிழக கவர்னர் ஆர்.என். ரவி, இதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.

அரசியல் சாசனத்தையும், சட்டத்தையும் பாதுகாப்பதற்கும், தமிழக மக்களின் சேவைக்கும், நல்வாழ்விற்கும் தன்னை அர்ப்பணித்துக் கொள்வதற்கும், 159-ஆவது பிரிவின்கீழ் எடுத்த உறுதிமொழியை கவர்னர் ஆர்.என். ரவி மீறியுள்ளார் என்பது தெளிவாகிறது. அவர் வகுப்புவாத வெறுப்பைத் தூண்டிவிட்டு, மாநிலத்தின் அமைதிக்கு அச்சுறுத்தலாக இருக்கிறார். அதுமட்டுமல்லாமல், அதிமுக முன்னாள் அமைச்சர்கள்மீது வழக்கு தொடர சிபிஐ வேண்டுகோள் விடுத்தும், அதற்கு அனுமதி தராமல் காலம் தாழ்த்தி வருகிறார். அதோடு, எனது அமைச்சர் ஒருவர் மீது வழக்கு விசாரணை தற்போது தொடங்கியுள்ள நிலையில், அவரை "டிஸ்மிஸ்" செய்ய அவசர கதியில் செயல்படுவதன் மூலம் தனது அரசியல் சார்புகளை வெளிப்படுத்தியுள்ளார்.

ஆர்.என். ரவி, தனது நடத்தை மற்றும் செயல்பாடுகள்மூலம், தான் ஒருதலைப்பட்சமானவர் மற்றும் கவர்னர் பதவியை வகிக்க தகுதியற்றவர் என்பதை நிரூபித்துள்ளார். அவர் உயர் பதவியில் இருந்து நீக்கப்படுவதற்கு தகுதியானவர். அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 156(1)-இல், ஜனாதிபதி விரும்பும் காலம் வரை கவர்னர் பதவியில் இருப்பார் என்று உள்ளது. தமிழக மக்களின் நலன் கருதியும், தமிழக அரசின் நலன் கருதியும் மேற்குறிப்பிட்டுள்ள அனைத்து உண்மைகளையும் ஜனாதிபதியின் கனிவான பார்வைக்கு வைக்க விரும்புகிறேன். நமது இந்திய அரசியலமைப்பை உருவாக்கிய முன்னோர்களின் உணர்வையும், மாண்புகளையும் பாதுகாக்கும் வகையில், கவர்னர் போன்ற உயர்ந்த அரசியலமைப்புப் பதவியில் ஆர்.என். ரவி நீடிப்பது விரும்பத்தக்கதாகவோ அல்லது பொருத்தமானதாகவோ உள்ளதா என்பதை ஜனாதிபதியின் முடிவுக்கே விட்டுவிடுகிறேன். இவ்வாறு ஜனாதிபதிக்கு எழுதியுள்ள கடிதத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Trending News

Latest News

You May Like