விலை உயரும் அபாயம்.. வெங்காய ஏற்றுமதிக்கு மத்திய அரசுத் தடை !

அனைத்து ரக வெங்காயம் ஏற்றுமதிக்கும் தடை விதித்து மத்திய அரசு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
நாடு முழுவதும் வெங்காய விலை சமீப நாட்களாக திடீரென அதிகரித்து வருகிறது. இதனால், உள்நாட்டு சந்தையில் வெங்காயத்தின் வரத்து குறைந்து காணப்படுகிறது.
கன மழை, வெள்ளம் போன்றவை இதற்கு காரணமாக கூறப்பட்டாலும், விலை உயர்வு மேலும் ஏற்படாமல் தவிர்க்க தற்போதைய தடை நடவடிக்கை உதவும் என்று இந்திய வர்த்தகத்துறை அமைச்சக உயரதிகாரி தெரிவித்தார்.
வெங்காயம் விலை அக்டோபர் முதல் பிப்ரவரி மாதம் வரை ஆண்டுதோறும் கிடுகிடுவென உயர்வது வழக்கம். இப்போது வெங்காயம் ஒரு கிலோ நாடு முழுவதும் சுமார் 45 ரூபாய் முதல் 60 ரூபாய் வரை விற்பனையாகிறது.
வரும் பண்டிகைக் காலத்தில் வெங்காயத்தின் தேவை உயரக்கூடிய நிலையில், வரத்து குறைவால் தட்டுப்பாடு ஏற்படும் அபாயமுள்ளது. அதைத் தடுக்கும் வகையில் அனைத்து ரக வெங்காயம் ஏற்றுமதிக்கும் தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்த தடை உடனடியாக அமலுக்கு வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், உள்நாட்டு சந்தைகளில் வெங்காயம் வரத்து அதிகரித்து விலை உயராமல் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
newstm.in