#RIP MANOJ : நடிகர் மனோஜின் இறுதிச் சடங்கு எப்போது?

தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குநர்களில் ஒருவரான பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதிராஜா. இவர் தாஜ் மஹால் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தந்தை பாரதிராஜா இயக்கத்திலேயே மனோஜ் பாரதிராஜா அறிமுகமானார். 1999ம் ஆண்டு பெரும் எதிர்பார்ப்பில் அப்படம் வெளியானது.
தொடர்ந்து, சமுத்திரம், மாநாடு, அல்லி அர்ஜுனா, வருஷமெல்லாம் வசந்தம், ஈஸ்வரன், மாநாடு, விருமன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். கடந்தாண்டு இவர் இயக்கிய முதல் திரைப்படமான 'மார்கழி திங்கள்' வெளியானது. குஷி, கற்றது தமிழ் திரைப்படங்களில் நடிக்க வந்த வாய்ப்புகள் தான் தவறவிட்டுவிட்டதாக அவரே ஒரு பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். இவர் மணிரத்னத்திடம் உதவி இயக்குநராக பணியாற்றி உள்ளார். முதல் படமாக பம்பாயில் இயக்குநர் மணிரத்னத்திடம் உதவி இயக்குநராக பணியாற்றி உள்ளார்.
ஈரநிலம், சாதுரியன் உள்ளிட்ட படங்களில் நடித்தபோது அதில் கதாநாயகியாக நடித்த நடிகை நந்திதா உடன் காதல் ஏற்பட்டது. பின்னர் இந்த ஜோடிக்கு 2006ஆம் ஆண்டில் திருமணம் நடைபெற்றது. மனோஜ் - நந்திதா ஜோடிக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.
மனோஜ் பாரதிராஜா நடிப்பில் இருந்து விலகி இருந்தார்.இதற்கிடையே கடந்த சில காலமாகவே அவருக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
ஒரு மாதத்திற்கு முன்பு, சென்னை வடபழனி சிம்ஸ் மருத்துவமனையில் மனோஜ் பாரதிராஜாவிற்கு ஓப்பன் ஹார்ட் அறுவை சிகிச்சை நடந்துள்ளது. அதன் பிறகு, வீட்டில் இருந்தவாறு சிகிச்சை எடுத்து வந்துள்ளார். இரண்டு, மூன்று தினங்களாக உடல் நலக் குறைவு ஏற்பட்டு இருக்கிறது. திடீர் உடல்நலக்குறைவால் நேற்று மாலை 6 மணி அளவில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். அவர் ஏற்கனவே மரணம் அடைந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இந்தச் சூழலில் மனோஜ் பாரதிராஜாவுக்கு எங்கே எப்போது இறுதிச்சடங்குகள் நடைபெறும் என்பது குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளது. இப்போது நீலாங்கரையில் உள்ள பாரதிராஜா இல்லத்திற்கு மனோஜ் உடல் எடுத்துச் செல்லப்பட்டுள்ள நிலையில், அங்கு திரைத்துறையினர் & பொதுமக்களின் அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்படும். தொடர்ந்து அவரது இறுதிச் சடங்கு இன்று மாலை 4:30 மணி அளவில் பெசன்ட் நகர் மயானத்தில் நடைபெறும் எனத் தெரிகிறது.. முன்னதாக மனோஜ் பாரதிராஜாவின் திடீர் மறைவு பல்வேறு தரப்பினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அவருக்கு வயது வெறும் 48 ஆகும்.