லாஸ் ஏஞ்சல்ஸில் வெடித்தது கலவரம்; கடும் நடவடிக்கை எடுக்க டிரம்ப் உத்தரவு..!

அமெரிக்காவில் முறையான ஆவணங்கள் இல்லாமலும், சட்டவிரோதமாகவும் குடியேறியவர்களை கண்டறிந்து அதிபர் டிரம்ப் நாடுகடத்தி வருகிறார். அவரது உத்தரவுக்கு ஏற்ப முறையான ஆவணங்கள் இல்லாமல் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் அத்துமீறி தங்கியிருந்த 44 பேரை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
இந்த கைது நடவடிக்கையை அடுத்து நகரில் பல்வேறு இடங்களில் புலம்பெயர்ந்தோருக்கு ஆதரவாக முற்றுகை போராட்டம் நடந்தது. போராட்டம் தொடர்பான வீடியோ காட்சிகளும் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது. இதனால் அங்கு பரபரப்பான சூழல் நிலவுகிறது.
இந்நிலையில், அதிபர் டிரம்ப் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: ஒரு காலத்தில் சிறந்த அமெரிக்க நகரமாக இருந்த லாஸ் ஏஞ்சல்ஸ், சட்டவிரோத குடியேறிகளாலும், குற்றவாளிகளாலும் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளது.
இப்போது வன்முறை, கிளர்ச்சி கும்பல்கள் எங்கள் நாடு கடத்தல் நடவடிக்கைகளை நிறுத்த தாக்குதல் நடத்தி வருகின்றனர். ஆனால் இந்த சட்டவிரோத கலவரங்கள் எங்கள் உறுதியை வலுப்படுத்துகின்றன.
உள்நாட்டுப் பாதுகாப்புச் செயலாளர் கிறிஸ்டி நோயம், பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத் மற்றும் அட்டர்னி ஜெனரல் பாண்டி ஆகியோர், மற்ற அனைத்து தொடர்புடைய துறைகள் மற்றும் நிறுவனங்களுடன் ஒருங்கிணைந்து, லாஸ் ஏஞ்சல்ஸை புலம்பெயர்ந்தோர் படையெடுப்பிலிருந்து விடுவிக்க முயற்சி செய்ய வேண்டும்.
கலவரங்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கும் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு நான் உத்தரவிட்டு உள்ளேன். லாஸ் ஏஸ்சல்ஸில் சட்டம் ஒழுங்கு மீட்டெடுக்கப்படும். சட்டவிரோத குடியேறிகள் வெளியேற்றப் படுவார்கள். அவர்களின் பிடியில் இருந்து லாஸ் ஏஞ்சல்ஸ் விடுவிக்கப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இது குறித்து அமெரிக்க புலனாய்வு அமைப்பான எப்.பி.ஐ., காஷ் படேல் கூறியதாவது: ஒரு போலீஸ்காரரை தாக்கினால் நீங்கள் சிறைக்கு செல்ல நேரிடும். நீங்கள் எங்கிருந்து வந்தீர்கள்? எப்படி இங்கு வந்தீர்கள் அல்லது எந்த இயக்கம் உங்களுக்கு பின் ஆதரவாக இருக்கிறது என்பது எங்களுக்கு முக்கியமல்ல. உள்ளூர் போலீசார் கூறுவதை நீங்கள் கேட்கவில்லை என்றால், நாங்கள் விசாரிக்க நேரிடும். இவ்வாறு காஷ் படேல் எச்சரித்துள்ளார்.