ரிதன்யா தாய் கதறல் : அம்மா முத்தம் குடுத்தா எந்திரிப்பியே மா ரிதன்யா!

திருமணமாகி 78 நாட்கள் ஆன நிலையில் அவிநாசியை அடுத்து மொண்டிபாளையம் கோயிலுக்குச் செல்லும் வழியில் சாலையோரம் காரை நிறுத்தி தென்னை மரத்திற்கு பயன்படுத்தப்படும் பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார் ரிதன்யா.
தற்கொலை செய்வதற்கு முன்பு தனது செல்போனில் இருந்து தனது தந்தைக்கு வாட்ஸ் அப் மூலமாக, உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் தன் கணவர் மற்றும் கணவர் குடும்பத்தார் கடுமையான சித்திரவதை செய்து வந்ததாகவும், தன் சாவிற்கு தனது கணவர் கவின்குமார் மாமனார் ஈஸ்வரமூர்த்தி மற்றும் மாமியார் சித்ராதேவி ஆகியோர் தான் காரணம் என்று உருக்கமாக பேசிய ஆடியோவை அனுப்பியிருந்தார்.
இதையடுத்து சேயூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு, ரிதன்யாவின் தற்கொலைக்கு காரணமான அவரது கணவர் கவின்குமார் மற்றும் மாமனார் ஈஸ்வரமூர்த்தி ஆகியோர் மீது தற்கொலைக்கு தூண்டுதல், துன்புறுத்துதல் என இரு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். இதனையடுத்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருப்பூர் சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் மூன்றாவது குற்றவாளியான மாமியார் சித்ராதேவியின் உடல்நலம் ஒத்துழைக்காததால் "பைண்டிங் ஆர்டர்" என்ற முறையில் எப்போது அழைத்தாலும் நேரில் வந்து விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் விடுவிக்கப்பட்டுள்ளார் என்ற தகவலை அவிநாசி துணை காவல் கண்காணிப்பாளர் சிவகுமார் தெரிவித்தார்.
இந்த வழக்கு குறித்து திருப்பூர் கோட்டாட்சியர் மோகனசுந்தரம் மற்றும் அவிநாசி துணை காவல் கண்காணிப்பாளர் சிவக்குமார் தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் ரிதன்யா தற்கொலை செய்து கொண்ட பின்பு காரிலிருந்து அவரது உடலை மீட்கப்படும் காட்சிகள் அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர் தனது செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். அந்த வீடியோவில் தனது மகளின் உடலை கண்டு அவரது தாயார் ஜெயசுதா, கதறி துடித்து அழுகும் காட்சி கல் மனதையும் கலங்க வைப்பதாக இருந்தது. அதில், அம்மா முத்தம் குடுத்தா எந்திரிப்பியே மா என நெஞ்சில் அடித்து கதறும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி வருகிறது.
ரிதன்யாவின் தந்தை அண்ணாதுரை கூறுகையில்: பாரம்பரியக் குடும்பம் என நம்பி பெண்ணைக் கொடுத்து ஏமாந்துவிட்டோம். திருமணமான 15 நாளில் ரிதன்யா எங்கள் வீட்டுக்கு வந்து கண்ணீர் விட்டு அழுதார். உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் அவரை மிகவும் கொடுமைப்படுத்தி உள்ளனர். திருமணத்தின்போது கணக்கில்லாமல் நகை போட்டும், இன்னும் நகை கேட்டு துன்புறுத்தி உள்ளனர். வீட்டுக்குள் பூட்டி வைத்து சித்ரவதை செய்துள்ளனர். என் மகளுக்கு நிகழ்ந்ததுபோல இனி யாருக்கும் நடக்கக் கூடாது என கண்ணீர் மல்க கூறியுள்ளார். இதனிடையே ரிதன்யாவின் தந்தை அண்ணாதுரை, தாய் ஜெயசுதா மற்றும் உறவினர்கள், நேற்று சேலம் வந்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து புகார் அளித்து சென்றது குறிப்பிடத்தக்கது.