ரிதன்யா கணவர் குடும்பத்தினரின் ஜாமீன் மனு தள்ளுபடி..!
திருப்பூர் மாவட்டம், அவிநாசி அருகே கைகாட்டிபுதூர் பகுதியைச் சேர்ந்த ரிதன்யா (வயது 27), வரதட்சணை கொடுமை காரணமாக ஜூன் 28 ந்தேதி பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ரிதன்யாவின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில், அவரது கணவர் கவின்குமார் (வயது 28) மற்றும் மாமனார் ஈஸ்வரமூர்த்தி ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, இருவரும் கைது செய்யப்பட்டு திருப்பூர் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து, இந்த வழக்கில், கவின்குமார் மற்றும் ஈஸ்வரமூர்த்தி ஆகியோர் திருப்பூர் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் ஜாமின் கோரி மனு தாக்கல் செய்தனர். அவர்கள் தரப்பில், ரிதன்யாவின் மரணத்திற்கு வரதட்சணை தொடர்பில்லை என்றும், அவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் தவறானவை என்ற வாதத்தை முன்வைத்து இருந்தனர்.
ரிதன்யா வழக்கில் கணவர், மாமனார், மாமியாரின் ஜாமின் மனுக்களை திருப்பூர் முதன்மை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. கவின்குமார், ஈஸ்வர மூர்த்தி - சித்ரா தேவி தம்பதிக்கு ஜாமின் வழங்க ரிதன்யா குடும்பத்தினர் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்ட நிலையில், ஜாமீன் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.