கட்டுப்பாடுகள் அமல்..! காலை 10 மணி முதல் இரவு 7 மணிவரை மட்டுமே கடைகள் செயல்பட அனுமதி..!
கேரள மாநிலம் மலப்புரத்தை சேர்ந்த 24 வயது இளைஞர் ஒருவர், பெங்களூருவில் படித்து வந்தார். அண்மையில் அவர் தமது சொந்த ஊருக்குத் திரும்பி இருக்கிறார். அடுத்த சில நாட்களில் தொடர்ந்து காய்ச்சல் இருக்கவே உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் இளைஞர் சேர்க்கப்பட்டார்.
அங்கு அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் திடீரென உயிரிழந்தார். அவரின் ரத்த மாதிரிகளைச் சோதனை செய்தபோது நிபா வைரசால் பலியானது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து சுகாதார அமைச்சர் வீணா ஜார்ஜ், நிபா வைரஸ் பரவலை தடுக்க களம் இறங்கும்படி சுகாதாரத்துறையினருக்கு உத்தரவிட்டு உள்ளார்.
கட்டுபாடுகள் என்னென்ன?
நிலைமையின் தீவிரத்தை கருத்தில் கொண்டு, வைரஸ் பரவல் தடுக்க இன்று (செப்.,16) பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
* பள்ளிகள், கல்லூரிகள், அங்கன்வாடிகள் மற்றும் திரையரங்குகள் மூட உத்தரவிடப்பட்டு உள்ளது.
* பொதுக்கூட்டங்களும் நடத்த தடை விதிக்கப்பட்டது. காலை 10 மணி முதல் இரவு 7 மணிவரை மட்டுமே கடைகள் செயல்பட வேண்டும்.
* பொதுமக்கள் முகமூடி அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்.
* ‘தற்போது கவலைப்பட ஒன்றுமில்லை. தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது’ என மாநில சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்தார். தற்போது 3 பேர் நிபா வைரஸ் அறிகுறிகளால் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
* நிபா வைரஸ் உறுதி செய்யப்பட்ட திருவாலி ஊராட்சியில் காய்ச்சல் கணக்கெடுப்பு பணியையும் சுகாதாரத் துறையினர் நடத்தி வருகின்றனர். இதற்கு, அங்கன்வாடி பணியாளர்கள் அடங்கிய 16 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.