பரங்கிமலைக்கு பதில் ஆலந்தூர் ரயில் நிலையத்தை பயன்படுத்த வேண்டுகோள்!

சென்னையில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளதால் முக்கிய ரயில் நிலையமான தாம்பரம் ரயில் நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டது. இதைத்தொடர்ந்து மெட்ரோ ரயில் நிலையங்களிலும் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் பயணிகள் பாதிப்படைந்துள்ளனர். குறிப்பாக பரங்கிமலை மெட்ரோ ரயில் நிலையத்தை சுற்றி சுமார் நான்கு அடி உயரத்திற்கு தண்ணீர் தேங்கியுள்ளது. பொதுமக்களுக்கு ரயில் நிலையத்திற்குள் நுழைய தடையும் விதிக்கப்பட்டது. எனவே பரங்கிமலை மார்க்கமாக செல்லும் பயணிகள் ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையத்தை பயன்படுத்திக் கொள்ளுமாறு நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. பரங்கி மலையில் இருசக்கர வாகனம் நிறுத்துமிடத்தில் முழுவதுமாக வெள்ள நீர் ஆக்கிரமித்துள்ளது. மேலும் வெள்ள நீரை அகற்றும் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது.
நகரின் பல பகுதிகளில் இடுப்பளவு வெள்ளம் சூழ்ந்து இருப்பதால் பொதுமக்கள் தங்களுடைய நான்கு சக்கர மற்றும் இரண்டு சக்கர வாகனங்களை உயரமான மேம்பாலங்களில் நிறுத்தி வைத்துள்ளனர். பல இடங்களில் மழையினால் மாற்றுப் பாதையை பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டுள்ளது. இதனால் அத்தியாவசியமான பணிகளுக்காக வெளியில் வருவோர் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளனர்.