வள்ளுவர் கோட்டம் புனரமைக்கும் பணி தொடக்கம் : அமைச்சர் சாமிநாதன்..!
திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு சென்னை வள்ளுவர் கோட்டத்தில் அமைந்துள்ள திருவள்ளுவர் திருவுருவ சிலைக்கு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன், சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சென்னை மேயர் பிரியா, தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநர் அருள் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
இதன் பின்னர் நிருபர்களிடம் அமைச்சர் சாமிநாதன் கூறியதாவது:
உலகத்திற்கு பொதுமறையை தந்த திருவள்ளுவரின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் மரியாதை செய்யப்பட்டுள்ளது. கருணாநிதி முதல்வராக இருந்தபோது வள்ளுவர் கோட்டத்தை அமைத்தார். தமிழகத்திற்கே சிறப்பு சேர்க்கும் வகையில் இந்த இடம் சென்னையில் அமைந்துள்ளது.
அதேபோல், குமரியில் திருவள்ளுவருக்கு மிகபிரம்மாண்ட சிலையும் கருணாநிதி அமைத்து கொடுத்தார். மேலும், மயிலாப்பூரில் திருவள்ளுவர் பிறந்த பகுதி என்பதனால் அங்கு திருவள்ளுவருக்கு கோவிலில் அமைத்தும் கொடுத்தார். தற்போது அக்கோயில் ரூ.14 கோடி மதிப்பில் புனரமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.
கருணாநிதி அமைத்துக்கொடுத்துள்ள வள்ளுவர் கோட்டத்தை உலக தரத்தில் ரூ.80 கோடி மதிப்பீட்டில் செய்தித்துறை மற்றும் பொதுப்பணித்துறை இணைந்து புனரமைக்கு பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. இப்பணிகளை ஓராண்டிற்குள் முடிக்க திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.