காரில் தேசியக்கொடியை கழற்றினார் ? ராஜினாமா திட்டம்.. அதிர்ச்சி தரும் அதிமுக வட்டார தகவல்கள் !

அதிமுகவில் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இது தொடர்பாக ஓ.பி.எஸ் - ஈ.பி.எஸ் இடையே மறைமுக மோதல் போக்கு நீடித்து வருகிறது. இதனால் தான் செயற்குழு கூட்டத்தில் முடிவு எடுக்கமுடியவில்லை.
அதனைத்தொடர்ந்து அமைச்சர்கள் ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ் வீடு என மாறி மாறி சென்று ஆலோசனை நடத்தி வருகின்றனர். இரவு வரை இந்த ஆலோசனை நேற்று நீடித்தது.
இந்நிலையில் சென்னையில் அரசு விழாவிற்காக, அரசு சார்பில் வெளியிடப்பட்ட அழைப்பிதழில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பெயர் இடம்பெறாதது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாநகராட்சி சார்பில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை முதலமைச்சர் துவக்கி வைப்பதற்கான அழைப்பிதழ் அச்சிடப்பட்டது. அதில் துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் பெயர் இடம்பெறவில்லை. தனியார் பங்களிப்புடன் தான் இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதனால், தனியார் நிறுவனம் வெளியிட்ட அழைப்பிதழில் துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் பங்கேற்பார் என அச்சிடப்பட்டிருந்தது. ஆனால் அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அழைப்பிதழில் துணை முதல்வர் பெயர் இல்லை.
இதனிடையே ஓ.பன்னீர்செல்வம் தனது துணை முதல்வர் பதவியை ராஜினாமா செய்யப்போவதாக தகவல் பரவி வருகிறது. துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தனது காரில் இருந்து தேசியக் கொடியை கழற்றிவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இனி தனது சொந்த காரையே பயன்படுத்த அவர் முடிவு செய்துள்ளதாகவும் அதிமுக வட்டார தகவல்கள் கூறுகின்றன.
வரும் 7ஆம் தேதி முதலமைச்சர் வேட்பாளர் அறிவிக்கப்படும் என அதிமுக சார்பில் கூறப்பட்டிருந்தாலும், அதற்கு முன்னதாகவே முடிவு தெரிந்துவிடும் எனவும் அதிமுக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
newstm.in