டெல்லியின் 4-வது பெண் முதலமைச்சர் ரேகா குப்தா கடந்து வந்த பாதை..!

டெல்லி பல்கலைக்கழக மாணவர் சங்கத் தலைவராக அரசியல் வாழ்க்கையைத் தொடங்கிய ரேகா குப்தா மூன்று முறை கவுன்சிலராகவும், தெற்கு டெல்லி மாநகராட்சி மேயராகவும் திறம்பட செயல்பட்டவர் ஆவார்.
இளம்வயதிலேயே பாஜகவில் இணைந்து அர்ப்பணிப்புடன் பணியாற்றி வந்த ரேகா குப்தா, கட்சியின் தேசிய மகளிர் அணி துணைத் தலைவராகவும் செயல்பட்டு வருகிறார்.
இதற்கு முன் டெல்லி பாஜக பொதுச் செயலராகவும் அவர் பணியாற்றி வந்தார். தற்போது 50 வயதாகும் ரேகா குப்தா, சட்டப் பேரவைத் தேர்தலில் டெல்லி ஷாலிமர் பாக் தொகுதியில் போட்டியிட்டு சுமார் 30 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாகை சூடினார்.
இந்த நிலையில், அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் விதத்தில் அவரை முதலமைச்சர் பதவிக்கு பாஜக தலைமை தேர்ந்தெடுத்துள்ளது. கடந்த 2007-ஆம் ஆண்டில் முதல்முறையாக கவுன்சிலரான ரேகா குப்தா, தனது கடின உழைப்பின் மூலம் படிப்படியாக உயர்ந்து தற்போது டெல்லியின் முதலமைச்சராக தேர்வாகியுள்ளார்.டெல்லி முதலமைச்சராக பதவியேற்றுள்ள ரேகா குப்தா, எம்எல்ஏ-வாக முதல்முறை தேர்வான சூழலிலேயே தலைநகரின் உயரிய பதவியை அலங்கரித்துள்ளார்.
ஷீலா தீக்ஷித், சுஷ்மா சுவராஜ், அதிஷி வரிசையில் தலைநகர் டெல்லியின் 4-ஆவது பெண் முதலமைச்சர் என்ற பெருமையையும் ரேகா குப்தா தட்டிச் சென்றுள்ளார்.