பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு மீண்டும் பணி.. முதல்வர் உத்தரவு..!
புதுச்சேரியில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை அளிக்க, கதிர்காமத்தில் உள்ள இந்திராகாந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பிரத்யேக மருத்துவமனையாக மாற்றப்பட்டுள்ளது. அங்கு பணியாற்றும் ஒப்பந்த ஊழியர்கள் 54 பேர் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் பணிக்கு வரவில்லை.
சில ஒப்பந்த ஊழியர்கள் வருகைப் பதிவேட்டில் கையொப்பம் மட்டும் போட்டு விட்டு சென்று விட்டனர். இது சம்பந்தமாக மருத்துவக் கல்லூரி நிர்வாகம், கலெக்டரிடம் அறிக்கை சமர்ப்பித்தது. கொரோனா வைரஸ் பரவி வரும் சூழ்நிலையில், அப்பாதிப்பு தேசிய பேரிடராக அறிவிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில் மருத்துவமனை ஊழியர்கள் பணிக்கு வராதது சுகாதாரத்துறை பணியை பெரிதும் பாதிக்கும் என்பதால், மருத்துவமனையில் பணிக்கு வராத 54 ஒப்பந்த ஊழியர்களை பணி நீக்கம் செய்ய கலெக்டர் அருண் உத்தரவிட்டார்.
அதன்பேரில், 54 ஒப்பந்த ஊழியர்களையும் பணி நீக்கம் செய்து, கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 2ம் தேதி மருத்துவக் கல்லூரி நிர்வாகம் உத்தரவிட்டது. அவர்கள் மீண்டும் வேலை கேட்டு வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில், பணி நீக்கம் செய்யப்பட்ட 54 ஒப்பந்த ஊழியர்களுக்கு மீண்டும் பணி வழங்க முதல்வர் ரங்கசாமி உத்தரவிட்டுள்ளார்.
இதனை தொடர்ந்து கல்லூரி நிர்வாகம் ஏற்கனவே பிறப்பித்து இருந்த பணி நீக்க ஆணையை நேற்று ரத்து செய்துள்ளது. பணி நீக்கம் செய்யப்பட்ட 54 ஒப்பந்த ஊழியர்களும் பத்து நாட்களுக்குள் மருத்துவமனையில் பணியில் சேர வேண்டும் என, அரசு மருத்துவக் கல்லூரி இயக்குனர் உதயசங்கர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.