சென்னைக்கு Red Zone.. காவல் ஆணையர் திடீர் அறிவிப்பு..!

கடந்த ஏப்ரல் 19-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்று முடிந்தது. இதில் பதிவான வாக்குகள் ஜூன் 4-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. இந்த தேர்தலில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அந்தந்த மாவட்டங்களில் உள்ள வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. மேலும் வாக்கு எண்ணும் மையங்களில் 4 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளதோடு, அங்கு சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
முதல் அடுக்கில் துணை ராணுவத்தினர் துப்பாக்கி ஏந்தியபடி பாதுகாப்பு பணியை மேற்கொண்டு வருகின்றனர்., இரண்டாவதாக தமிழ்நாடு சிறப்பு படை போலீஸ், மூன்றாவதாக ஆயுதப்படை போலீஸ், நான்காவதாக உள்ளூர் போலீசாரும் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
அதேபோல், சென்னையில் மக்களவைத் தேர்தலில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், நுங்கம்பாக்கம் லயோலா கல்லூரி, மயிலாப்பூர் ராணி மேரி கல்லூரி, கிண்டி அண்ணா பல்கலைக்கழகம் ஆகிய இடங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சென்னை பெருநகர காவல் ஆணையர் சந்தீப்ராய் ரத்தோர் வெளியிட்டுள்ள உத்தரவில், சென்னையில் மக்களவைத் தேர்தலில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள இடங்கள் சிகப்பு மண்டலமாக (Red Zone) அறிவிக்கப்படுவதாக குறிப்பிட்டுள்ளார். இந்தப் பகுதிகளில் ஜூன் 4-ம் தேதி வரை ட்ரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறப்பதற்கு தடை விதிக்கப்படுவதாக அவர் கூறியுள்ளார்.