இன்று 6 மாவட்டங்களுக்கு 'ரெட் அலர்ட்'..!
தமிழகத்தில் இன்று நாகை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
இன்று செங்கல்பட்டு, விழுப்புரம், மயிலாடுதுறை, கடலூர், நாகை, திருவாரூர் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் அதி கனமழைக்கான (ரெட் அலர்ட்) விடுக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், அரியலூர், தஞ்சாவூர் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் இன்று மிக கனமழை (ஆரஞ்சு அலர்ட்) விடுக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் நகராமல் ஒரே இடத்தில் மையம் கொண்டுள்ளநிலையில் தற்போது நாகையில் கனமழை பெய்து வருகிறது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் மீண்டும் கனமழை பெய்ய தொடங்கி உள்ளது. இதன்படி நாகூர், வேளாங்கண்ணி, தலைஞாயிறு, வேதாரண்யம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. கடந்த 4 நாட்களாக பெய்து வந்த மழை குறைந்திருந்த நிலையில் தற்போது மீண்டும் கனமழை கொட்ட தொடங்கி உள்ளது. தற்போதைய நிலைவரப்படி, நாகப்பட்டினத்துக்கு தென்கிழக்கே 310 கி.மீ. தூரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலைக் கொண்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் மீண்டும் நகராமல் அதே இடத்தில் நீடிப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில மணி நேரங்களாக மணிக்கு 2 கிலோ மீட்டர் வேகத்தில் நகர தொடங்கி இருந்தநிலையில் தற்போது மீண்டும் அதே இடத்தில் நீடிப்பதாக கூறப்பட்டுள்ளது. தற்போதைய நிலைவரப்படி, சென்னைக்கு தென் கிழக்கே 480 கி.மீ. தூரத்திலும் தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலைக் கொண்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில் பாம்பனில் நேற்று 3வது நாளாக கடல் சீற்றமாக காணப்படுகிறது. இதனால் மண்டபம்பகுதியை சேர்ந்த குடியிருப்பு வாசிகள் அச்சத்தில் இருந்து வருகின்றனர்.
இதற்கிடையே வங்கக் கடலில் புயல் உருவாவது மேலும் தாமதமாகி உள்ளது. இதனிடையே ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 12 மணி நேரத்தில் புயலாக உருவாகக் கூடும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இதனிடையே இந்த புயல் வலுவிழந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி வரும் 30-ம் தேதி (நாளை) காரைக்கால்- மாமல்லபுரம் இடையே கரையைக் கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
.png)