தமிழகத்தில் 2 நாட்களுக்கு 'ரெட் அலர்ட்' : 14 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு..!
வானிலை ஆய்வுமையம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது., தென்மேற்கு வங்கக் கடலில் வருகிற 22-ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி 24-ந் தேதி வடகிழக்கு திசையில் நகர்ந்து மத்திய வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே தென்தமிழக கடலோரப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று (மே 19) தேனி, தென்காசி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் அதி கனமழையும், கன்னியாகுமரி, விருதுநகர், திண்டுக்கல், திருப்பூர், கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் கன முதல் மிக கனமழையும், தூத்துக்குடி, ராமநாதபுரம், மதுரை, சிவகங்கை மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை (மே 20) கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் அதி கனமழையும், விருதுநகர், திண்டுக்கல், திருப்பூர், கோயம்புத்தூர் மற்றும் ராமநாதபுரம், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சி, காரைக்கால் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
வரும் 22-ம் தேதி வரை குமரிக்கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தென்தமிழக கடலோரப்பகுதிகள், லட்சத்தீவு-மாலத்தீவு பகுதிகள், தென்கிழக்கு வங்கக்கடலின் கிழக்குப் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கி.மி வேகத்திலும் இடையிடையே 55 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும். இந்த நாள்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.