தென் தமிழகத்திற்கு ரெட் அலர்ட்..!!
தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நாளை (நவ.,21) ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகக்கூடும்.
நவ.,23ம் தேதி தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, அதற்கடுத்த இரு தினங்களில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும்.
இதன் காரணமாக, தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
திருவாரூர், நாகப்பட்டினம், திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களில் இன்று (நவ.,20) மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
அதேபோல், மயிலாடுதுறை, தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, விருதுநகர் ஆகிய 8 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
ஏற்கெனவே, தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு சென்னை வானிலை மையம் ஆரஞ்சு அலர்ட் விடுத்திருந்தது. இந்நிலையில், இந்திய வானிலை மையம் அதனை அதி கனமழைக்கான ரெட் அலர்ட் ஆக மாற்றி அறிவித்துள்ளது. தென் தமிழகத்தில் நேற்று முதல் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.
நவ.,25ம் தேதி, கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய 7 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னையில், அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் அதிகாலை வேளையில் பனி மூட்டம் காணப்படும்