நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்.. ப்ளீஸ் இதையெல்லாம் செய்யாதீங்க!
"ஊட்டி உட்பட நீலகிரி முழுவதும் அடுத்த 2 நாட்களுக்கு ரெட் அலர்ட் இருக்கிறது. ஊட்டி, பந்தலூர், குந்தா, கூடலூர் உள்ளிட்ட இடங்களில் மழையின் பாதிப்பு அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இடங்களில் முன்னெச்சரிக்கையாக குழுக்களை நிலை நிறுத்தியுள்ளோம். துணை ஆட்சியர் அளவிலான அதிகாரிகள் இந்த 4 தாலுக்காக்களில் நியமிக்கப்பட்டிருக்கின்றனர். வெள்ள பாதிப்பு அபாயம் இருக்கும் இடங்களிலிருந்து மக்கள் மீட்கப்பட்டு, பாதுகாப்பாக தங்க வைக்கப்பட இடங்கள் தயார் நிலையில் இருக்கின்றன.
அதேபோல உள்ளூர் மக்களுக்கும் சுற்றுலா பயணிகளுக்கும் சில எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டிருக்கின்றன. கனமழை காரணமாக மரங்கள் அதிக அளவில் சரியும். இதனால் மின்சார வயர்கள் அறுந்து விழும். எனவே மரங்கள் விழுந்துள்ள பகுதிகளுக்கு போக வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கிறது. நாங்கள் விடுக்கும் ஒரே கோரிக்கை, நிலைமை கையை மீறும்போது உள்ளூர் மக்கள் முகாம்களுக்கு வர வேண்டும் என்பதுதான். இதற்கான அறிவிப்பை தேவைப்படும்போது மாவட்ட நிர்வாகம் வழங்கும்.
ஊட்டியில் படகு சவாரி முற்றிலுமாக நிறுத்தப்பட்டிருக்கிறது. அடுத்த இரண்டு நாட்களுக்கும் இது நிறுத்தப்பட்டிருக்கும். மழையின் அளவை பொறுத்து அடுத்த கட்ட முடிவுகள் மேற்கொள்ளப்படும். மரங்களுக்கு கீழ் வாகனங்களை நிறுத்த வேண்டாம், நிற்க வேண்டாம், பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அருகில் செல்ஃபி எடுக்க முயல்வதை தடுக்க வெண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்படுகிறது. உள்ளூர் மக்களுக்கு மழைக்காலங்களில் ஊட்டி எப்படி இருக்கும் என்று தெரியும்.
ஆனால் சுற்றுலா பயணிகளுக்கு நிலைமையின் வீரியம் தெரியாது. மலையேற்றத்திற்கு அடுத்த 3 நாட்களுக்கு தடை நீட்டிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் சில சுற்றுலா பயணிகள் யாருக்கும் தெரியாமல் மலையேற முயற்சிப்பார்கள். அப்படி எந்த செயலிலும் ஈடுபட வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்ளப்படுகிறது" என்று கூறியுள்ளார்.