கோவை, நீலகிரி மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை..!
வங்கக்கடலில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றுவிட்டது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் இது வடக்கு திசையில் மெதுவாக நகர்ந்து, மேலும் வலிமை பெற வாய்ப்பு உள்ளது. இதனால் பருவமழை தீவிரமாவது உறுதியாகியுள்ளது.
இந்நிலையில் நாளை(மே29) மற்றும் நாளை மறுநாள் (மே30) நீலகிரி, கோவை மாவட்ட மலைப்பகுதிகளுக்கு மிக கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. திருப்பூர் மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. கோவை மாவட்டத்தில் கடந்த ஐந்து நாட்களாக அடை மழை பொழிந்து வருகிறது. இந்த நிலையில், அவ்வப்போது மழைவிடும் நேரங்களில் ஆளை தூக்கும் அளவுக்கு சூறைக்காற்று வீசுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கோயம்புத்தூர் மாவட்டம் சின்னக்கல்லாரில் 15 சென்டிமீட்டரும், நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் 14 சென்டி மீட்டரும் மழையும் பதிவாகியுள்ளது.