அயோத்தி ராமர் கோவிலுக்கு செல்பவர்களுக்கு தேவையான வசதிகளை செய்து தர தயார்: அமைச்சர் சேகர்பாபு..!
அயோத்தியில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள ராமர் கோவில் கும்பாபிஷேகம் வரும் 22-ம் தேதி மதியம் 12.20 மணிக்கு நடைபெற உள்ளது. இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபுவிடம், ராமர் கோவிலுக்கு செல்ல அறநிலையத்துறை ஏற்பாடு செய்து தருமா என கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது,
ராமர் கோவிலுக்கு செல்ல வேண்டும் என்று விரும்புகின்ற பக்தர்களிடம் இருந்து கோரிக்கைகள் வந்தால், முதலமைச்சரின் கவனத்திற்கு எடுத்துச் சென்று அவர்கள் செல்லுவதற்கு தேவையான வசதிகளை செய்து தர அறநிலையத்துறை தயாராக உள்ளது என்று தெரிவித்தார்.
தொடர்ந்து அமைச்சர் சேகர்பாபு கூறுகையில்,
கிளாம்பாக்கத்தில் திறக்கப்பட்டுள்ள பேருந்து நிலையத்திற்கு கலைஞர் பெயர் சூட்டியதில் எந்த தவறும் இல்லை. தமிழுக்கு பெருமை சேர்த்த தமிழர்கள் மீது அக்கறை கொண்ட கலைஞர் பெயர் சூட்டப்பட்டது சாலப் பொருத்தமானது.
அனைத்து தலைவர்களுக்கும் புகழ் சேர்கின்ற ஆட்சி தி.மு.க. ஆட்சி. நாவலருடைய நூற்றாண்டு விழாவை கொண்டாடியது முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி. ஆகவே இன்னார் இனியவர் என்று இல்ல. தமிழகத்திற்கும் தமிழக மக்களுக்கும் உழைத்த தலைவர்களை பெருமை சேர்ப்பது முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சி. இவ்வாறு அவர் தெரிவித்தார்.