1. Home
  2. தமிழ்நாடு

மலையேற ரெடியா..! தமிழ்நாடு மலையேற்ற திட்டத்தை தொடங்கி வைத்த துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்..!

1

தமிழ்நாட்டின் மொத்த வனப்பரப்பளவு 30,843.23 சதுர கிலோ மீட்டராக உள்ளது. இதில், யுனெஸ்கோவின் பாரம்பரிய தளமான மேற்குதொடர்ச்சி மலை பல்லுயிர் மற்றும் வளத்திற்கு புகழ்பெற்றது. யானை, புலி, சிறுத்தை, கரடி, காட்டு மாடு போன்ற வனவிலங்குகளுக்கு முக்கியமான வாழ்விடமாக உள்ளது. மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் கிழக்கு தொடர்ச்சி மலைகளில் ஆராய்ச்சி மற்றும் ஆன்மீகத்திற்காக குறிப்பிட்ட பகுதிகளில் மலையேற வனத்துறை மூலம் அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.

இது தவிர, வனத்துறை சார்பில் சூழல் சுற்றுலா திட்டத்தின் கீழ் சில பகுதிகளில் படகு சுற்றுலா, வாகன சுற்றுலா ஆகியவை செயல்பட்டு வருகிறது. ஆனால், கேரளா, கர்நாடகா போன்ற இடங்களில் இருப்பதுபோல் ‘டிரெக்கிங்’ என கூறப்படும் மலையேற்றத்தில் சுற்றுலா பயணிகள் ஈடுபட அனுமதியில்லை. இருப்பினும், நீலகிரி, தேனி, கொடைக்கானல், ஏற்காடு போன்ற இடங்களில் வனத்துறையினர் அனுமதியின்றி சிலர் ‘டிரெக்கிங்’ செய்கின்றனர். கடந்த 2018ல் தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் அருகே குரங்கணி காட்டில் 39 பேர் கொண்ட 2 குழுக்கள் கொழுக்குமலை பகுதியில் மலையேற்றத்தில் ஈடுபட்டனர்.

அப்போது ஏற்பட்ட காட்டுத்தீயில் மலையேற்றத்தில் ஈடுபட்ட 23 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பின்னர், தமிழ்நாடு அரசு சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை சார்பில் 2018 அக்டோபர் 12ல் மலையேற்ற விதிகள் 2018ன் கீழ் தமிழ்நாட்டில் உள்ள காப்பு காடுகள் மற்றும் வனவிலங்குகள் பகுதிகளில் மலையேற்றத்தை ஒழுங்குப்படுத்த அரசாணை ஒன்றை வெளியிட்டது. இதன்மூலம் மலையேற்ற வழிகள் எளிதான, மிதமான மற்றும் கடினமான என 3 வகையாக பிரிக்கப்பட்டது. மலையேற்றத்திற்காக வசூலிக்கப்படும் கட்டணங்கள் காடுகளின் வளர்ச்சி மற்றும் சூழல் சுற்றுலாவுக்காக பயன்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது.

மலையேற்றத்தின்போது தடை செய்யப்பட்ட செயல்களை செய்வது, விதிமீறல்களுக்காக விதிக்கப்பட வேண்டிய அபராதங்கள், மலையேற்ற விதிகள், அனுமதிக்கப்படும் ஆண்டின் காலம், நேரம் மற்றும் குழுக்களின் எண்ணிக்கை போன்றவற்றை ஒழுங்குப்படுத்தியது. மேலும், அதிகாரியிடம் அனுமதி இல்லாமல் மலையேறக்கூடாது. வனத்துறையில் பதிவு செய்யாமல் எந்த ஒரு ஏஜென்சி, அமைப்பு மலையேற்றத்தை ஏற்பாடு செய்யக்கூடாது என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, தமிழ்நாட்டில் காடுகள் மற்றும் வனவிலங்குகள் உள்ள பகுதியில் மலையேற்றம் மற்றும் சூழல் சுற்றுலா செயல்பாடுகளுக்கு தமிழ்நாடு வன அனுபவ கழகம் (டிஎன்டபிள்யூஇசி) ஏற்படுத்தப்பட்டது.

இதன் மூலம் தமிழ்நாட்டில் கோவை, நீலகிரி, ஈரோடு, கொடைக்கானல், திருநெல்வேலி உள்பட 40 இடங்களில் சுற்றுலா பயணிகளை வனப்பகுதியில் ‘டிரெக்கிங்’ கொண்டு செல்லும் திட்டம் துவங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, மலையேற்றம் செய்வதற்கான மலையேற்ற புத்தகம் ஒன்று தயார் செய்யப்பட்டு உள்ளது. மலையேற்றத்திற்கு ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யும் வகையில் இணையதளம் உருவாக்கப்பட்டு உள்ளது. இந்த இணையதளத்தில் மலையேற்றம் பகுதிகள், கட்டணம் போன்ற பல்வேறு தகவல்கள் இடம்பெறுகிறது. இத்திட்டம் இம்மாத இறுதியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் துவங்கி வைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் சூழல் சுற்றுலாவை மேம்படுத்தும் நோக்கில் 40 மலையேற்ற வழித்தடங்களை உள்ளடக்கிய 'தமிழ்நாடு மலையேற்ற திட்டம்' தொடங்கப்பட்டுள்ளது.  

www.trektamilnadu.com இணையதளத்தில் முன்பதிவு செய்து நுழைவுச் சீட்டை பெறலாம். வழிகாட்டிகளாக முறையான பயிற்சியுடன் பழங்குடி மற்றும் மலையோர கிராமங்களைச் சேர்ந்த இளைஞர்கள் 300 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 

Trending News

Latest News

You May Like