தேர்வுக்கு தயாரா ? வரும் 14-ம் தேதி டி.என்.பி.எஸ்.சி. குரூப் - 2 தேர்வு..!
தமிழக அரசு துறைகளில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை டி.என்.பி.எஸ்.சி. எனப்படும் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வு ஆணையம் நிரப்பி வருகிறது. பணியிடங்களுக்கு ஏற்ப உரிய அறிவிப்புகள் வெளியிட்டு போட்டி தேர்வுகள் மூலமாக ஆட்சேர்ப்பு நடைபெறும். 6,244 பணியிடங்களுக்கான டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 பணிக்கான தேர்வுகள் கடந்த ஜூன் 9-ம் தேதி நடைபெற்றது.
விரைவில் குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட உள்ளன. அதாவது அக்டோபர் மாதம் வெளியிடப்படும் என்று டி.என்.பி.எஸ்.சி. அறிவித்தது. குரூப் 4-க்கு அடுத்தபடியாக தேர்வர்கள் மத்தியில் அதிகம் எதிர்பார்க்கப்படும் தேர்வாக குரூப் 2, 2 ஏ உள்ளது.
இந்த நிலையில் தான், 2,327 பணியிடங்களுக்கான குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ பதவிகளை நிரப்புவதற்கான அறிவிப்பு கடந்த ஜூன் மாதம் வெளியானது. அதன்பிறகு குரூப் 2, குரூப் 2 ஏ பதவிகளுக்கான முதல் நிலைத் தேர்வு வரும்14-ம் தேதி நடைபெறுகிறது. டிகிரி கல்வி தகுதி கொண்ட இந்த பணியிடங்களுக்கு 7 லட்சத்து 93 ஆயிரத்து 962 பேர் விண்ணப்பித்து இருக்கிறார்கள்.
தேர்வுக்கு இன்னும் ஒரு வாரமே உள்ளது. இதனால், ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வர்கள், தேர்வு மையங்களுக்கு எதையெல்லாம் கொண்டு செல்லலாம். எதற்கெல்லாம் அனுமதி கிடையாது போன்ற தெளிவான வழிகாட்டுதல்களையும் டி.என்.பி.எஸ்.சி வெளியிட்டுள்ளது. தேர்வில் முறைகேடுகளை தவிர்க்கும் விதமாக பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டு இருக்கின்றன.
குறிப்பாக தேர்வுக்கூடங்களில், தேர்வர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில் புகைப்படத்துடன் பதிவெண்கள் தற்போது ஒட்டப்படுகின்றன. முறைகேடுகளை தவிர்க்க இந்த நடவடிக்கையை டி.என்.பி.எஸ்.சி. இந்த முறையை பின்பற்றி வருகிறது.
இந்த நிலையில், குரூப் 2 தேர்வில் தேர்வர்களை அவர்களின் பதிவெண்ணுடன் வீடியோ பதிவு செய்யும் முறையை டி.என்.பி.எஸ்சி. பின்பற்ற உள்ளது. இது தொடர்பாக டி.என்.பி.எஸ்.சி கூறியிருப்பதாவது:-
தேர்வு நடைபெறும் போது ஹால் டிக்கெட் அல்லது டேபிளில் எழுதப்பட்டுள்ள பதிவெண்ணுடன் சேர்த்து வீடியோகிராபர் தேர்வர்களை படம் எடுப்பார். வீடியோகிராபர், வீடியோ பதிவு செய்யும் போது தேர்வர்கள் முகத்தை மறைக்க கூடாது.
ஹால் டிக்கெட் அல்லது டேபிளில் உள்ள பதிவெண் என அனைத்தும் தெளிவாக தெரியும் படி ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். முறைகேடுகளில் ஈடுபடும் தேர்வர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை பாயும். அவர்கள் டி.என்.பி.எஸ்.சி தேர்வு எழுதவும் தடை விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.