தமிழக அரசின் இலவச கோர்ஸை படிங்க! ஆரம்ப சம்பளம் 45,000 ரூபாய்..!

தமிழ்நாடு அரசு Mobile App Developer பணிக்கு ஒரு தனி இலவச படிப்பை (Course) மாணவர்களுக்கு வழங்குகிறது. வளர்ந்து வரும் தொழில்நுட்ப உலகில் உயர்கல்வியுடன் இதுபோன்ற திறன்களை நீங்கள் மேம்படுத்திக்கொள்வது மிகவும் அவசியமாகிறது.
அரசின் இந்த இலவச படிப்பில் என்ன கற்றுக்கொடுக்கப்படும், இதனை கற்றுக்கொள்வதற்கான கால அளவு, பயிற்சி கொடுக்கும் இடங்கள், இதற்கு விண்ணப்பிப்பதற்கு தேவையான தகுதிகள், இதனை படித்தால் எந்தெந்த நிறுவனத்தில் வேலை கிடைக்கும், ஆரம்பகட்ட வருமானம் என்ன இருக்கும் என்பதை இங்கு விரிவாக காணலாம்.
Mobile App Developer கோர்ஸ் மூலம் நீங்கள், ஆண்ட்ராய்ட் மற்றும் ஐபோன் மொபைல்களுக்கான செயலிகளை உருவாக்கவும், செயல்படுத்தவும் கற்றுக்கொடுக்கப்படும். செயலிகள் தங்குதடையின்றி விரைவாக செயல்படும் வகையிலும், அதன் பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் பயனாளர் அனுபவத்தை மேம்படுத்தவும் உங்களுக்கு கற்றுக்கொடுக்கப்படும். செயலிகள் ஏற்படும் பிழைகளை சீர்திருத்தி, அவை திறம்படச் செயலாற்ற பயிற்சி அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த படிப்பை முழுமையாக கற்க 210 மணிநேரமாகும். இதற்கு நீங்கள் விண்ணப்பிக்க 12ம் வகுப்பு முடித்திருக்க வேண்டும், அல்லது அதற்கு நிகரான பிற படிப்பை முடித்திருக்க வேண்டும். 18 வயதுக்கு மேற்பட்ட யார் வேண்டுமானாலும் இந்த படிப்பை இலவசமாக கற்றுக்கொள்ளலாம். எவ்வித கட்டணமும் வசூலிக்கப்படாது.
சென்னை, மதுரை, திருச்சி, தஞ்சாவூர், சிவகங்கை, புதுக்கோட்டை, இராமநாதபுரம், கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இந்த இலவச கோர்ஸ் பயிற்றுவிக்கப்படுகிறது.இந்த கோர்ஸை நிறைவு செய்தால் GRIT Talents, Gradianty, AIRNODE UK, IBM, Brainhunters MY ஆகிய நிறுவனங்களில் வேலைவாய்ப்பு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் உங்களது ஆரம்ப சம்பளமே மாதம் ரூ.35 ஆயிரம் முதல் ரூ.45 ஆயிரம் வரை இருக்கும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. மேலும், தகவல்களுக்கு பின்வரும் இந்த URL-ஐ காப்பி செய்து இணையத்தில் தேடவும். https://candidate.tnskill.tn.gov.in/skillwallet/course/3709