பிரமாண்ட சாம்ராஜ்யத்தை உருவாக்கிய ரத்தன் டாடா கடந்து வந்த பாதை..!
1937ம் ஆண்டு சூரத் நகரில் நாவல் டாடா - சுனு தம்பதியினருக்கு பிறந்தவர் ரத்தன் டாடா. தனது 10 வயதில் பொற்றோரை பிரிந்து பாட்டியின் வீட்டில் வளர்ந்தவர், மும்பையின் கேம்பியன் பள்ளியில் தனது ஆரம்பக் கல்வியைத் தொடங்கினார். கதீட்ரல் மற்றும் ஜான் கோனன் பள்ளிகளில் தனது படிப்பை முடித்தார். தொடர்ந்து ஹார்வார்டு பல்கலைகழகத்தில் தனது நிர்வாக மேற்படிப்பை 1975ம் ஆண்டு படித்து முடித்தார். படித்து முடித்ததும் இவருக்கு IBMல் வேலை கிடைத்தது. ஆனால், அவருக்கு அமெரிக்காவில் பணிபுரிவதில் விருப்பம் இல்லை. இந்தியாவில் தான் பணியாற்ற வேண்டும் என்ற உறுதியுடன் இருந்த ரத்தன் டாட்டா அதே ஆவலுடன் தாய்நாடு திரும்பினார்.
அதனையடுத்து தனது குடும்ப நிறுவனமான டாடா குழுமத்தில் சேர்ந்து பணியாற்றத் தொடங்கினார். சொந்த நிறுவனத்தில் சேர்ந்துவிட்டோம் என உடனே அவர் பெரிய பொறுப்பை ஏற்றுக் கொள்ளவில்லை. அடிப்படையான சிறிய பொறுப்புகளிலிருந்தே தன்னை வளர்த்துக்கொண்டவர். சிறிய பொறுப்புகளில் பணிபுரிந்து நுணுக்கங்களைத் தெரிந்துகொண்டதால், உழைப்பின் அருமையும், அதிலிருக்கும் கஷ்டத்தையும் அடிமட்டத்தில் அறிந்துகொண்டார். ஏறக்குறைய 30 வருடம் உழைத்தார். டாடா குழுமத்தின் பல்வேறு பொறுப்புகளில் பணிபுரிந்தார். 1991ல் நிறுவனர் ஜே.ஆர்.டி டாடாவால், டாடா குழுமங்களின் தலைவராக நியமிக்கப்பட்டார் ரத்தன் டாடா. அன்றைக்குத் தொடங்கி இன்றைக்கு வரை, டாடா குழுமத்தின் அசுர வளர்ச்சிக்கு வித்திட்டவர். இவரைக் கண்டு உலகமே வியக்கும் தலைவராக உருவெடுத்துள்ளார். டாடா நிறுவனத்தில் அவர் பொறுப்பேற்பதற்கு முன்புவரை, டாடா குழுமம் என்பது இந்தியாவில் உள்ள பெரிய நிறுவனம் மட்டுமே.
அதனை உலக அரங்கில் கொண்டு சென்றவர் ரத்தன் டாட்டா. உலக மார்கெட்டில் மிகப்பெரிய அடிகளை எடுத்து வைத்து டாடா குழுமம் உலகின் மூலை முடுக்கெங்கிலும் தனக்கான வாய்ப்புகளைத் தேடி அலைந்தவர். ஒவ்வொரு நாட்டின் சந்தையிலும் தனி முத்திரை பதித்தார். இரும்பு, மென்பொருள், கெமிக்கல், தேநீர், கார்கள் என அனைத்து துறையிலும் தடம் பதித்தார். இந்தியாவிலேயே ஆண்டுக்கு ஒரு பில்லியன் அமெரிக்க டாலர் வருவாய் ஈட்டிய முதல் இந்திய மென்பொருள் நிறுவனம் என்ற பெருமையை பெற்றது டாடா குழுமத்தைச் சார்ந்த டிசிஎஸ். கார்களை தயாரிப்பதில் ஆர்வம் அதிகரிக்க, 2008ல் லேன்ட்ரோவர், ஜாக்குவார் நிறுவனங்களின் இந்திய உரிமையை வாங்கினார்.அதே நேரத்தில் வெளிநாட்டில் இந்திய கார்களுக்கு டிமாண்டை உருவாக்கியவரும் இவரே என்றால் அது மிகையில்லை. உலகின் மிகப்பெரிய இரும்பு நிறுவனமான கோரஸ்-ஐ வாங்கி, இரும்பு உற்பத்தியில் உலக அளவில் முண்ணனியில் கொண்டு வந்தார்.
இந்தியப் பொருளாதார வளர்ச்சியில் மிகப்பெரிய பங்களிப்பு வகித்ததால் இந்திய அரசு இவருக்கு பத்ம பூஷன் விருதும், பத்ம விபூஷன் விருதும் வழங்கி கௌரவித்தது. சாமானியனும் காரில் பயணிக்க வேண்டும் என்ற எண்ணத்தை நிறைவேற்றி அழகு பார்த்தவர் . அதன் எதிரொலியாக உதித்தது தான் டாடா நானோ திட்டம். வெறும் 1 லட்ச ரூபாயில் கார்களை வெளியிட முன்வந்தது டாடா. ஆனால், அவரின் இந்த முயற்சியை பார்த்து உலகமே சிரித்தது. 1லட்சத்தில் காரா? குறைந்த தரத்துடன், சிறிய விபத்தில் அப்பளமாக நொறுக்கும் வகையில்தான் இருக்கப்போகிறது என பலரும் கேலி பேசினர். அவர்களின் வார்த்தைகளை பொய்யாக்கி இந்திய சாலைகளில் நானோ கார்கள் ஓடத் தொடங்கின. அவர் அறிவித்ததை காட்டிலும் சற்றே விலை அதிகம் தான். நானோ காரின் விலை 1.25 லட்சம். சற்று கூடுதலாக இருந்தாலும், உலகின் மிகவும் குறைந்த விலை கார் என்ற பெருமையுடன், நல்ல தரத்துடன் வெற்றிகரமான மாடலாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டது. பிசினசில் வெற்றிப் பெறுபவர்கள் பெரும்பாலும் பணத்தின் பின் ஓடுபவர்களாகவே இருக்கின்றனர்.
ரத்தன் டாடா பலருக்கும் முன்மாதிரியாய் தொழிலில் பல துறைகளில் சிறக்க நினைத்தாலும் பணம் ஈட்டுவதை முதன்மையாகக் கொண்டு இவற்றை செய்யாததே அவரின் தனிச்சிறப்பு. அதேபோல், டாடா ட்ரஸ்ட் மூலமாக ரத்தன் டாடா முன்னெடுத்துள்ள தொண்டு பணிகள் மற்றும் நன்கொடைகள் சொல்லில் அடங்காதவை. கொரோனாவால் உலகமே திணறிக்கொண்டிருந்த நிலையில், அதை எதிர்த்துப் போராடும் நடவடிக்கைகளுக்காக ரத்தன் டாடா 500 கோடி நிதி ஒதுக்கினார். மருத்துவப் பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள், நோயாளிகளின் சிகிச்சைக்காக சுவாசிக்க உதவும் உபகரணங்கள், பரிசோதனைக் கருவிகள் என பார்த்து பார்த்து நிதியுதவி வழங்கினார்.
தமிழகத்துக்கும் டாடா குழுமம், கொரோனா கண்டறிவதற்காக சுமார் 8 கோடி ரூபாய் மதிப்பில் 40 ஆயிரத்து 32 பிசிஆர் கிட் கருவிகளை வழங்கியுள்ளது. உலகத்தையே தன்னை நோக்கி திரும்பிப்பார்க்க வைத்தவர் இன்று வரை திருமணம் செய்துகொள்ளவில்லை. ஒருமுறை ரத்தன் டாடாவிடம், ’நீங்கள் ஏன் இன்னும் திருமணம் செய்துகொள்ளவில்லை?’ எனக் கேட்டதற்கு, சிரிப்புடன் இப்படிக்கூறினார், “4 முறை கல்யாணம் செய்யும் நிலைக்குச் சென்று, கடைசியில் அது நிறைவேறாமல் போனது. எனக்கு 4 காதல் தோல்விகள் உள்ளன” என்றார். உலகச் சந்தையில் இந்தியாவிற்கு ஓர் அந்தஸ்த்தை ஏற்படுத்திக் கொடுத்ததில் பெரும்பங்கு ரத்தன் டாடாவிற்கு உரியது எனக் கூறினால் மிகையில்லை.