1. Home
  2. தமிழ்நாடு

தமிழக மாணவர்களுக்கு அரிய வாய்ப்பு.. இங்கு எல்லாமே இலவசம்..!

தமிழக மாணவர்களுக்கு அரிய வாய்ப்பு.. இங்கு எல்லாமே இலவசம்..!


திராவிட மொழிகளை கற்கவும், தமிழில் பட்ட மேற்படிப்பு, ஆய்வு படிப்புகளை இலவசமாக கற்கவும் நினைக்கும் மாணவர்களுக்கு, ஆந்திர மாநிலம் குப்பத்தில் உள்ள திராவிட பல்கலைக்கழகம் அவர்களுக்கான வாய்ப்பை வழங்குகிறது.

ஆந்திர மாநிலம் குப்பம் பகுதியில் திராவிட பல்கலைக்கழகம் உள்ளது. இது, தமிழகத்தில் இருந்து 15 கி.மீ. தொலைவிலும், கிருஷ்ணகிரியில் இருந்து 35 கி.மீ. தொலைவிலும் உள்ளது. இங்கு தமிழ், தெலுங்கு, கன்னடம் பேசுவோர் அதிக அளவில் வசிக்கின்றனர்.

தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முதல் துணைவேந்தர் வ.ஐ.சுப்ரமணியன் முயற்சியால், குப்பத்தில் 1997ல் திராவிட பல்கலைக்கழகம் துவக்கப்பட்டது. 2005 முதல் தமிழ்த் துறை இயங்கி வருகிறது.

இதில், எம்.ஏ., எம்.பில்., பி.எச்டி பிரிவுகள் உள்ளன. இங்கு சேரும் மாணவர்களுக்கு கல்விக் கட்டணம், உணவு கட்டணம் மற்றும் விடுதி கட்டணத்தை தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறை செலுத்துகிறது.

காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை வகுப்புகள் நடக்கும். மேலும் தெலுங்கு, கன்னடம், மலையாள மொழிகளும் இலவசமாக கற்பிக்கப்படும்.

இது, மொழிபெயர்ப்பு பணிகளுக்கும், வேலைவாய்ப்புகளுக்கும் வசதியாக இருக்கும். அத்துடன், முதல் மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு பல்வேறு அமைப்புகள் நிதியுதவியும் அளிக்கின்றன.

இதுகுறித்து, பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் மாரியப்பன் கூறியதாவது: “இங்கு, ஆண்டுதோறும் 30 மாணவர்களுக்கு இலவச கல்வி அளிக்கப்படுகிறது. துவக்கத்தில், தமிழக மாணவர்களிடம் இதற்கு போட்டி இருந்த நிலையில் தற்போது, இதுகுறித்த தகவல்களை கூட தமிழ் வளர்ச்சித் துறையும், தமிழக அரசும், கல்லுாரி மாணவர்களுக்கு தெரிவிப்பதில்லை.

இதனால், ஒவ்வொரு ஆண்டும் 10க்கும் குறைவான மாணவர்களே சேர்கின்றனர். கடந்த ஆண்டு, பல்கலைக்கழகத்தை ஆய்வு செய்த ஆந்திர அரசின் கல்விக் குழு, மாணவர் சேர்க்கை குறைவாக இருந்தால், துறையை மூடிவிட பரிந்துரைத்துள்ளது. இதை உணர்ந்து மாணவர்களை அதிகம் சேர்க்க தமிழ் பேராசிரியர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

இந்த ஆண்டுக்கான சேர்க்கை தேதி முடிந்த நிலையில், வரும் 20ம் தேதி வரை கால நீட்டிப்பு செய்துள்ளோம். வேறு மாநிலத்துக்குச் சென்றால், படிப்பது கடினமாக இருக்கும் என மாணவர்கள் எண்ணத் தேவையில்லை.

இங்கு, அதிக அளவில் தமிழர்கள் வசிப்பதோடு, பேராசிரியர்களும் உறுதுணையாக இருப்பர். இந்த வாய்ப்பை தமிழக மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்” என அவர் கூறினார்.

Trending News

Latest News

You May Like