கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு.. 31 மாணவர்கள் சென்டம்!
தமிழ்நாட்டில் உள்ள கால்நடை மருத்துவக் கல்லூரிகளில் உள்ள கால்நடை மருத்துவம் மற்றும் பராமரிப்பு சார்ந்த 4 இளநிலை பட்டப் படிப்புகளுக்கும், உணவு தொழில்நுட்பம், பால்வளம், கோழியினம் ஆகிய தொழில்நுட்ப படிப்புகளுக்கும் 12-ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் கலந்தாய்வு மூலம் மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டு வருகிறது.
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் சென்னை, நாமக்கல், திருநெல்வேலி, ஒரத்தநாடு, சேலம் தலைவாசல், உடுமலைப்பேட்டை, தேனி வீரபாண்டி ஆகிய 7 இடங்களில் கால்நடை மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இந்தக் கல்லூரிகளில் ஐந்தரை ஆண்டுகள் கொண்ட கால்நடை மருத்துவம் மற்றும் பராமரிப்பு படிப்புக்கு 660 இடங்கள் உள்ளன.
சென்னை, நாமக்கல், திருநெல்வேலி, ஒரத்தநாடு ஆகிய 4 கல்லூரிகளில் உள்ள 420 இடங்களில் மட்டும் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 63 இடங்கள் (15 சதவீதம்) ஒதுக்கப்படுகின்றன. இதுபோக, தமிழகத்துக்கு 597 இடங்கள் உள்ளன.
இந்த நிலையில், 2023-24 ஆம் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கைக்கு கடந்த ஜூன் 12 முதல் 30-ம் தேதி வரை விண்ணப்ப பதிவு நடைபெற்றது. இந்த படிப்புகளுக்கு 12-ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறுவதால் சுமார் 22 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பித்தனர்.
இந்நிலையில் கால்நடை மருத்துவ படிப்பிற்கான மாணவர்களின் தரவரிசைப் பட்டியலை கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் நேற்று வெளியிட்டது. இந்த தரவரிசைப் பட்டியலை https://adm.tanuvas.ac.in, https://tanuvas.ac.in என்ற இணைய தளங்களில் பார்க்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கால்நடை மருத்துவம் மற்றும் கால்நடை பராமரிப்பு பட்டப் படிப்பிற்கான தரவரிசை பட்டியலில் 31 மாணவர்கள் 200க்கு 200 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். பி.டெக் தொழில்நுட்ப படிப்பிற்கான தரவரிசையில் ஒருவர் 200க்கு 199.5 மதிப்பெண் பெற்றுள்ளார். அரசுப் பள்ளி மாணவர்களுக்கான இட ஒதுக்கீட்டில் சேலம் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள் இருவர் 200க்கு 200 பெற்றுள்ளனர்.
இந்த மாணவர்களுக்கு ஆகஸ்ட் முதல் வாரத்தில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நடத்தப்பட இருக்கிறது. சிறப்புக் கலந்தாய்வு, அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீடு கலந்தாய்வு மற்றும் பி.டெக் படிப்புகளுக்கான கலந்தாய்வு மட்டும் நேரடியாக நடைபெறும் எனவும் மற்ற அனைத்து இடங்களுக்கும் ஆன்லைன் மூலம் மட்டுமே கலந்தாய்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.