ரம்ஜான் சிறப்பு ரயில் அறிவிப்பு..!

ரம்ஜான் பண்டிகை திங்கட்கிழமை வருவதால் சனி, ஞாயிறு மற்றும் திங்கட்கிழமை என தொடர்ந்து 3 நாட்கள் அடுத்தடுத்து விடுமுறை வருவதால், பேருந்துகளிலும் டிக்கெட்கள் வேகமாக விற்றுத் தீர்ந்து வருகின்றன. இந்த நிலையில், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் விடுமுறை கால சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுவதற்கான அறிவிப்பு விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து கோவை அருகே உள்ள போத்தனூருக்கு ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இந்த சிறப்பு ரயில் (06027) டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வரும் 30-ந் தேதி ஞாயிற்றுக்கிழமை இரவு 11.20 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் அதாவது 31-ந் தேதி திங்கட்கிழமை காலை 8 மணிக்கு போத்தனூர் சென்றடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மறுமார்க்கத்தில் இந்த சிறப்பு ரயில் (06028) மார்ச் 31 அன்று இரவு 11.30-க்கு போத்தனூரில் இருந்து புறப்பட்டு மறுநாள் காலை 8.20 மணிக்கு டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வந்து சேரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ரம்ஜான் சிறப்பு ரயில் அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என்றும் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
இந்த ரயிலில் 10 மூன்றடுக்கு குளிர்சாதனப் பெட்டிகள், 7 படுக்கை வசதி கொண்ட 2ம் வகுப்புப் பெட்டிகள் மற்றும் 2 சரக்குப் பெட்டிகள் இருக்கும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. ரம்ஜானை முன்னிட்டு பயணத் திட்டத்தை முன்கூட்டியே வகுத்துக் கொள்ளுமாறு தெற்கு ரயில்வே பயணிகளைக் கேட்டுக் கொண்டுள்ளது.