திருநெல்வேலி மாநகராட்சி மேயர் வேட்பாளராக ராமகிருஷ்ணன் அறிவிப்பு..!
நெல்லை மாநகராட்சி மேயராக இருந்த சரவணன் பதவியை ராஜினாமா செய்தார். இதனைத் தொடர்ந்து, நாளை மறைமுக மேயர் தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி, அமைச்சர்கள் கே.என்.நேரு மற்றும் தங்கம் தென்னரசு ஆகியோர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.
இவ்வாறு வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள கிட்டு, நெல்லை மாநகராட்சியின் 25வது வார்டு மாமன்ற உறுப்பினர் ஆவார். மேலும், இவர் 1980 முதல் திமுக உறுப்பினராக உள்ளார். 2வது முறை கவுன்சிலராகவும், அதேநேரம் 5 முறை திமுக வட்டச் செயலாளராக இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகம் முழுவதும் ஆளுங்கட்சியான திமுகவில் நிலவும் உட்கட்சி பூசல் காரணமாக மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி போன்ற உள்ளாட்சி அமைப்புகளில் ஆளுங்கட்சி கவுன்சிலர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் தலைவர்களுக்கும் இடையே தொடர் மோதல் போக்கு நீடித்து வருகிறது. குறிப்பாக பல மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் தலைவர்கள் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்படுகிறது.
அந்த வகையில், நெல்லை மாநகர திமுகவில் நிலவும் கடும் உட்கட்சி பூசல் காரணமாக மாநகராட்சி மேயராக இருந்த சரவணன் மீது கவுன்சிலர்கள் அடுக்கடுக்கான புகார்களைத் தெரிவித்து வந்தனர். மேலும், அவரை மாற்றும்படி தொடர்ச்சியாக திமுக தலைமைக்கு அழுத்தம் கொடுத்து வந்த நிலையில், நெல்லை மேயராக இருந்த சரவணன் சமீபத்தில் தனது பதவியை ராஜினாமா செய்தார். அதேபோல், கோவை மாநகராட்சி மேயரும் உள்கட்சி பூசல் காரணமாக பதவியை ராஜினாமா செய்தார். அடுத்தடுத்து ஆளுங்கட்சி மேயர்கள் இருவர் பதவியை ராஜினாமா செய்த சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.