1. Home
  2. தமிழ்நாடு

ராமதாஸ் சரமாரி கேள்வி : + 2 தேர்வில் பெயில்..ஆனால் நீட் தேர்வில் 98% மதிப்பெண்...அது எப்படி?

1

பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள பதிவில், "குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் , மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வில் 720-க்கு 705 (98%) மதிப்பெண் பெற்று வெற்றி பெற்ற மாணவி ஒருவர், அம்மாநில தேர்வு வாரியம் நடத்திய 12-ஆம் வகுப்புப் பொதுத்தேர்வை இரு முறை எழுதியும் வெற்றி பெற முடியாமல் தோல்வியடைந்துள்ளார். நீட் தேர்வு மாணவர்களின் உண்மையான திறனை வெளிக்கொண்டு வருவதில்லை என்பதை இந்த நிகழ்வு நிரூபித்துள்ளது.

குஜராத் மாநில கல்வி வாரியம் கடந்த மார்ச் மாதம் நடத்திய 12-ஆம் வகுப்புப் பொதுத்தேர்வில் வேதியியல் பாடத்தில் 31 மதிப்பெண்களும், இயற்பியல் பாடத்தில் 21 மதிப்பெண்களும் பெற்று தோல்வியடைந்தார். அதைத் தொடர்ந்து கடந்த மாதம் நடத்தப்பட்ட துணைத் தேர்வுகளை மீண்டும் எழுதிய அந்த மாணவி வேதியியல் பாடத்தில் சரியாக 33 மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெற்றார். ஆனால், இயற்பியல் பாடத்தில் 22 மதிப்பெண்களை மட்டுமே எடுத்த அந்த மாணவி மீண்டும் தோல்வியடைந்துள்ளார். ஒப்பீட்டளவில் மாநிலப் பாடத்திட்ட பொதுத்தேர்வுகளை விட நீட் தேர்வு கடினமானதாக கருதப்படுகிறது. ஆனால், கடினமான நீட் தேர்வில் 98% மதிப்பெண் பெற்று தேர்ச்சியடைந்த மாணவி, மிகவும் எளிதான 12-ஆம் வகுப்புத் தேர்வில் 33 மதிப்பெண்களைக் கூட எடுக்க முடியவில்லை என்பதிலிருந்து நீட் தேர்வை நடத்துவதில் ஏதோ தவறு நடந்திருக்கிறது என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. நீட் தேர்வில் வினாத்தாள் கசிவு, காப்பியடித்தல் உள்ளிட்ட பல முறைகேடுகள் நடப்பதாக தொடர்ந்து எழுப்பப்பட்டு வரும் குற்றச்சாட்டுகளை இந்த நிகழ்வு உறுதி செய்திருக்கிறது. நீட் தேர்வு மீதான நம்பகத் தன்மையை இது மேலும் குலைத்துள்ளது.

நீட் தேர்வு மாணவர்களின் திறனை அளவிடுவதற்கான சரியான அளவுகோல் அல்ல, பயிற்சி மையங்களை உருவாக்கி கோடிக்கணக்கில் பணம் ஈட்டுவதற்கு மட்டும் தான் நீட் தேர்வு உதவும் என்று பாட்டாளி மக்கள் கட்சி பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறது. அது இந்த நிகழ்வின் மூலம் மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே நம்பகத்தன்மையற்ற நீட் தேர்வை ரத்து செய்து விட்டு, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கையை நடத்த மத்திய அரசு முன்வர வேண்டும்" இவ்வாறு ராமதாஸ் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.


 

Trending News

Latest News

You May Like