#BIG NEWS : தொண்டர்கள் ஷாக்..! இரண்டாக உடைகிறது பாமக..! கட்சி யாருக்கு?
பாமகவில் இப்போது இரண்டு அணிகள் உள்ளன. ஒரு அணி ராமதாஸ் தலைமையிலும், இன்னொரு அணி அன்புமணி தலைமையிலும் செயல்படுகிறது. ராமதாஸ் மீண்டும் தலைவராக வருவது கட்சியில் குழப்பத்தை ஏற்படுத்தலாம் என்று சிலர் கூறுகின்றனர். ஆனால், ராமதாஸ் ஆதரவாளர்கள் அவர் தலைவராக வருவதை வரவேற்கிறார்கள். அவர் தலைமையில் கட்சி வளர்ச்சி அடையும் என்று அவர்கள் நம்புகிறார்கள்.
'ஆரம்பம் முதலே தாம் கட்சிக்குப் பாடுபட்டதால் நான் சொல்வதே சரி என்றும், அதற்கு எல்லோரும் கட்டுப்பட வேண்டும்' என்கிறார், ராமதாஸ். ஆனால், அவருக்கு எதிராகக் கட்சி நடவடிக்கைகளில் அன்புமணி ஈடுபடுவதாக மற்றொரு பக்கம் குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது. இதனால், கடந்த சில மாதங்களாக பாமக இரண்டு அணிகளாக உள்ளது.
ராமதாஸ் மாவட்ட செயலாளர்களை நீக்கி புதிய மாவட்ட செயலாளர்களை நியமிக்க தொடங்கினார். அதற்கு அடுத்த நிமிடமே அன்புமணி ராமதாஸ் பொதுக்குழுவாள் தேர்ந்தெடுத்த தலைவருக்கு மட்டுமே, நிர்வாகிகளை நியமிக்கும் அதிகாரங்கள் உண்டு. எனவே நீங்கள் அனைவரும் பொறுப்பில் தொடருவீர்கள் என, கடிதம் கொடுக்க தொடங்கினர்.
தொடர்ந்து ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்து, அன்புமணி மீது அடுக்கடுக்கான விமர்சனங்களை முன்வைக்க தொடங்கினார். எனது பேரை பயன்படுத்தக் கூடாது, ஓட்டு கேட்கும் கருவியை அன்புமணி வைத்தார், அன்புமணி வாயை திறந்தாலே பொய் கூறுவார் என அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை ராமதாஸ் முன்வைத்தது, பாமகவினர் மத்தியில் அன்புமணியின் மீது இயல்பாகவே ஆதரவை அதிகரிக்க தொடங்கியது.
இதற்கிடையே, ராமதாஸ் மற்றும் அன்புமணி தரப்பு தனித்தனியே பொதுக்குழு கூட்டங்களை நடத்தின. அதன்படி, ஆகஸ்ட் 9ஆம் தேதி மகாபலிபுரத்தில் நடைபெற்ற பாமக பொதுக்குழு கூட்டத்தில், அன்புமணி ராமதாஸே கட்சியின் தலைவராக நீடிப்பார் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில் ராமதாஸும், அவரது தரப்பும் பங்கேற்கவில்லை. அவருக்காக நாற்காலிகூடப் போடப்பட்டிருந்தது. மேலும், இக்கூட்டத்தில், ராமதாஸை எதிர்த்து யாரும் பேசவில்லை என்றாலும், ராமதாஸுக்கு இனி பாமகவில் எந்த அதிகாரமும் இல்லை என்பதை இந்தப் பொதுக்குழு பிரகடனப்படுத்தியது. முன்னதாக, இந்தக் கூட்டத்திற்கு கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தடை கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். ஆனால், அந்தக் கூட்டத்தை நடத்துவதற்கு உத்தரவு பிறப்பித்த நீதிமன்றம், ராமதாஸின் மனுவையும் தள்ளுபடி செய்தது.
இந்த நிலையில், கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தலைமையில் திண்டிவனத்தில் சிறப்புப் பொதுக்குழுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்தப் பொதுக்குழுவில் கட்சியின் வளர்ச்சியைத் தடுக்கும் வகையில் செயல்பட்டது என அன்புமணி மீது 16 குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டன. மேலும், கூட்டத்தில் 37 தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன. அவை, பாமக முழுமையாக ராமதாஸின் கையிலேயே இருப்பதை உறுதிபடக் கூறுபவையாக இருந்தன. அதாவது, பாமகவின் கட்சி விதிகளில் முக்கியமான சில திருத்தங்களை மேற்கொண்டு, தேர்தல் படிவங்களில் கையெழுத்திடும் அதிகாரம், 2026 சட்டமன்றத் தேர்தல் கூட்டணி குறித்துப் பேசும் அதிகாரம், வேட்பாளர்களை தேர்வு செய்யும் அதிகாரம் என முக்கிய அதிகாரங்கள் அனைத்தையும் இந்தப் பொதுக்குழுவின் வழி தன் வசம் கொண்டுவந்துள்ளார் ராமதாஸ்.தவிர, இக்கூட்டத்தில் அன்புமணி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதற்கான குழுவும் அறிவிக்கப்பட்டது. மறுபுறம், வழக்கமாக பாமக பொதுக்குழு மேடைகளில் அன்புமணி அமரும் இருக்கையில், அதாவது நிறுவனர் ராமதாஸுக்கு அருகில் உள்ள் இருக்கையில், இந்த முறை அவரது மகள் காந்திமதி அமரவைக்கப்பட்டிருந்தார். அவருக்கு வீரவாளும் பரிசளிக்கப்பட்டது. மேலும், இளைஞரணி பதவியிலிருந்து விலகிய அவரது மகன் முகுந்தனை காந்திமதி மேடைக்கு அழைத்தபோதும், அவர் மறுத்துவிட்டார். பாமக இளைஞரணி தலைவராக முகுந்தனை ராமதாஸ் நியமித்தபோதுதான், அன்புமணிக்கும் ராமதாஸ்க்கும் இடையே பிளவு ஏற்பட்டதாக கருதப்படுகிறது.
இரண்டு தரப்பும் தங்களை தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு இருப்பதாக தீர்மானங்கள் நிறைவேற்றி இருக்கின்றன. தீர்மானங்களை தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது. இதன் மூலம் பாமக இரண்டாக உடைந்து இருப்பதாகவே அரசியல் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
அதேநேரத்தில், பட்டானூரில் நடத்தப்பட்ட கூட்டம், பாமக பொதுக்குழு அல்ல என்றும், அதன் முடிவுகள் பாமகவை கட்டுப்படுத்தாது எனவும் அன்புமணி தரப்பைச் சேர்ந்த வழக்கறிஞர் கே.பாலு தெரிவித்துள்ளார். “பாமகவின் அமைப்பு விதிகள் 15, 16 ஆகியவற்றின் அடிப்படையில் பாமக பொதுக்குழு உள்ளிட்ட எந்தக் கூட்டமும், பொதுக்குழுவால் தேர்வு செய்யப்பட்ட கட்சியின் தலைவர் தலைமையில்தான் நடத்தப்பட வேண்டும்” என கே.பாலு குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து சட்ட வல்லுநர்கள் கூறுகையில், பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனராக ராமதாஸ் இருந்தாலும், பாமக என்பது தனிநபர் சொத்தாக இருக்காது. ஜனநாயக முறைப்படி தேர்தல் ஆணையம் முடிவெடுக்கும். அதன்படி மூன்றில் இரண்டு, பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவு யாருக்கு இருக்கிறதோ, அவர்களின் கைக்கு தான் கட்சி செல்லும்.
சமீபத்தில் அதிமுகவில் நடந்த பிரச்சனை கூட, எடப்பாடி பழனிசாமிக்கு சாதகமாக முடிய பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவுதான் காரணமாக இருந்தது.