மாநிலங்களவை எம்.பி. ஆனார் கமல்.!

கடந்த 2018ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 21ஆம் தேதி மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியைத் தொடங்கினார் கமல் ஹாசன். கட்சி தொடங்கிய அடுத்த ஆண்டு அதாவது 2019ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் இவரது கட்சி முதன் முதலாக தேர்தலைச் சந்தித்தது. இந்த தேர்தலில் கிட்டத்தட்ட மாநிலங்கள் முழுவதும் சுமார் 15 லட்ச வாக்குகளைப் பெற்றது. அதேபோல் கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற பொதுத் தேர்தலில் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்டு பாஜகவின் வானதி சீனிவாசனிடம் 1728 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவினார்.
அதன் பின்னர் கட்சியில் ஏற்பட்ட சில குளறுபடிகளால் கட்சியில் இருந்த நிர்வாகிகள் ஒவ்வொருவராக விலகி, திமுகவில் இணைந்தனர். அதேபோல் கடந்த 2024ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கு முன்னர் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நடத்திய பாரத் ஜோடோ யாத்திரையில் கலந்து கொண்டார். இதனால் இவர் காங்கிரஸ் உடன் கை கோர்க்க போகிறார் என எதிர்பார்க்கப்பட்டது. கடந்த 2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் I.N.D.I.A கூட்டணிக்காக பிரசாரம் செய்தார்.
அந்த தேர்தலின்போது மக்கள் நீதி மய்யத்திற்கு மாநிலங்களவை உறுப்பினராக ஒரு இடம் வழங்கப்படும் என கூட்டணி முடிவு செய்யப்பட்டது. இதனால் கமல்ஹாசன் திமுக வேட்பாளர்களுக்கும் பிரச்சாரம் செய்தார். அதுவும் தனது மக்கள் நீதி மய்யம் பிரச்சார வாகனத்திலேயே பிரச்சாரமும் செய்தார். இந்நிலையில் இவர் திமுக சார்பில் மாநிலங்களவை உறுப்பினராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இதற்கான அதிகாரபூா்வ அறிவிப்பை தோ்தல் நடத்தும் அதிகாரியான சுப்பிரமணியம் அறிவித்துள்ளார்
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மாநிலங்களவைக்கு தமிழ்நாட்டிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஆறு உறுப்பினர்களின் பதவிக்காலம் 24.07.2025-ஆம் நாளன்று முடிவடைவதால் ஏற்படும் காலியிடங்களுக்கு கீழ்க்காணும் வேட்பாளர்கள் முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள்:-
திமுக சாா்பில் பி.வில்சன், கவிஞா் சல்மா, சிவலிங்கம், மக்கள் நீதி மய்யம் தலைவா் கமல்ஹாசன் ஆகியோரும், அதிமுக சாா்பில் தனபால், ஐ.எஸ்.இன்பதுரை ஆகியோரும் மாநிலங்களவை உறுப்பினர்களாக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.