1. Home
  2. தமிழ்நாடு

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலையான முருகன் உள்ளிட்ட மூவர் இலங்கை புறப்பட்டனர்..!

1

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டு 30 ஆண்டுகளாக சிறையில் இருந்த பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி, ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகிய 7 பேரும் 2022ம் ஆண்டு சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டனர்.

இலங்கை குடிமக்களான முருகன், சாந்தன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ் ஆகிய நான்கு பேரும் திருச்சியில் உள்ள சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டனர். இவர்களில் உடல்நலக்குறைவு காரணமாக சாந்தன் உயிரிழந்தார். இந்த நிலையில் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை முடிந்து விடுதலையான முருகன், லண்டன் செல்ல விசா எடுக்க அடையாள அட்டை வழங்குமாறு மறுவாழ்வு இயக்குனருக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு விசாரணையின் போது, ”முருகன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ் ஆகிய மூவருக்கும் இலங்கை துணை தூதரகம் பாஸ்போர்ட் வழங்கியுள்ளது. மத்திய அரசு அனுமதி அளித்ததை அடுத்து, திருச்சி சிறப்பு முகாமில் இருந்த முருகன் உள்பட 3 பேரும் காவல்துறை வாகனம் மூலம் சென்னைக்கு அழைத்து வரப்பட்டனர். நேற்று இரவு 11.15 மணிக்கு சென்னை வருகை தந்த நிலையில், நேற்று காலை 10 மணிக்கு சென்னை விமான நிலையத்தில் இருந்து விமானம் மூலம் இலங்கைக்கு புறப்பட்டுச் சென்றனர்.இலங்கை சென்ற மூவரையும் காட்டுநாயக்க விமான நிலைய அதிகாரிகள் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.இலங்கையிலிருந்து இந்தியா சென்றது எப்படி என்பது குறித்து அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் இவர்கள் மூன்று பேரையும் இலங்கை போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் அவர்கள் மூவரும் விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் தொடர்புடையவர்கள் என இந்தியாவின் புலனாய்வு அமைப்பான சிபிஐ குற்றம்சாட்டியுள்ள நிலையில் முன்னாள் பிரதமரை படுகொலை சம்பவத்தில் இவர்களுடைய பங்கு என்ன என்பது குறித்தெல்லாம் இலங்கை போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சுமார் 35 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் மூவரும் தங்களது தாய் மண்ணில் கால் பதிக்கின்றனர். இதில் சாந்தனின் தாய் தனது மகன் உயிரோடு இலங்கை வருவார் என்று எதிர்பார்த்த நிலையில், சாந்தன் உயிரிழந்த பிறகு அவரது உடல் மட்டுமே இலங்கை சென்றடைந்தது அவரது உறவினர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Trending News

Latest News

You May Like