அதிமுகவின் பிரம்மாஸ்திரம் இரட்டை இலை சின்னம் - நடிகர் ரஜினிகாந்த்..!
தமிழகத்தின் முதல் பெண் முதல்வரான காலஞ்சென்ற ஜானகி அம்மாளின் நூற்றாண்டு விழா சென்னையில் நடைபெற்றது.
இதில் கலந்துகொண்டு பேசிய ரஜினிகாந்த், எம்ஜிஆர் மறைவுக்குப் பிறகு இக்கட்டான சூழல் காரணமாகவே ஜானகி அம்மாள் அரசியலுக்கு வந்ததாகக் குறிப்பிட்டார்.
பின்னர் தமக்கு அரசியல் ஒத்துவராது என்று கூறி, ஜெ.ஜெயலலிதாவிடம் இரட்டை இலைச் சின்னத்தை ஒப்படைத்ததாகவும் தமிழக மக்களின் நலன் கருதி அரசியலில் இருந்து விலகி, ஜெயலலிதாவிடம் ஜானகி அம்மாள் பொறுப்பைக் கொடுத்ததாகவும் ரஜினி தெரிவித்தார்.
“எம்ஜிஆருக்காக தனது திரை வாழ்க்கையைத் தியாகம் செய்து கடைசி வரை அவருக்கு உறுதுணையாக இருந்தார் ஜானகி அம்மாள். அதிமுகவின் பிரம்மாஸ்திரம் இரட்டை இலை. அது கட்சிக்கு மீண்டும் கிடைக்க ஜானகி அம்மாள் பெரும் தியாகம் செய்தார்.
“நான் அரசியலுக்கு வருவதாக அறிவித்தபோது நிறைய பேரைச் சந்தித்தேன். பலர் ஆலோசனை சொல்ல வந்தனர். அவற்றை எல்லாம் கேட்டிருந்தால் அவ்வளவுதான், நிம்மதி உள்பட எல்லாவற்றையும் இழந்திருப்பேன். யாருடைய ஆலோசனையையும் கேட்காமல், தானே முடிவெடுத்து இந்த அரசியல் எனக்கு சரிபட்டு வராது என இருந்துவிட்டேன்.
“’உங்களிடம்தான் திறமை, துணிச்சல், பக்குவம் இருக்கிறது, உங்களால்தான் முடியும்’ என்று கூறி ஜெயலலிதாவிடம் இரட்டை இலைச் சின்னத்தை ஒப்படைக்க முன்வந்தார். அந்த குணம் பாராட்டத்தக்கது,” என்றார் ரஜினிகாந்த்.