சாலையில் தேங்கிய மழைநீர்; பணியில் மாநகராட்சி ஊழியர்கள்!
ஃபெஞ்சல் புயல் (Cyclone Fengal) இன்று மாலை மாமல்லபுரம் - காரைக்காலுக்கு இடையே கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில்,அதிகாலை முதல் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்து வருகிறது. குறிப்பாக தாம்பரம், பல்லாவரம், குரோம்பேட்டை, சேலையூர், பெருங்களத்தூர், வண்டலூர், சிட்லபாக்கம், மீனம்பாக்கம், ஆலந்தூர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் காலை 5 மணி முதல் காற்றுடன் மிதமான மழை பெய்து வருகிறது. இதனால், தாம்பரம் ஜிஎஸ்டி சாலை உள்ளிட்ட தாழ்வான பகுதிகளில் சாலையில் மழை நீர் தேங்கியுள்ளது.
மழை நீர் தேங்கும் இடங்களை ஆய்வு மேற்கொண்டு உடனடியாக தீங்கும் மழை நீரை, அப்புறப்படுத்த தாம்பரம் மாநகராட்சி ஆணையர் பாலச்சந்தர் ஊழியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். அதன்பேரில், மழைநீர் தேங்கும் பகுதிகளில் மின் மோட்டார்களை வைத்து மழை நீரை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னை மற்றும் புதுச்சேரியை நெருங்கிய ஃபெஞ்சல் புயல் நகரும் வேகம் குறைந்து வருவதால், புயல் கரையைக் கடக்கும் நேரம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.