சென்னையில் இரவு முழுவதும் மழை.. வடமாவட்டங்களுக்கு வானிலை மையம் கனமழை எச்சரிக்கை !

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தின் வடமாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், ஆந்திர கடற்பகுதியில் காக்கிநாடாவுக்கு அருகில் தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக நீடிக்கின்றது. இது அடுத்த இரண்டு நாட்கள் வடமேற்கு திசையில் நகரும்.
இதன் காரணமாக திருவண்ணாமலை, காஞ்சிபுரம், சேலம், நாமக்கல், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கோயம்புத்தூர், நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில்மிதமான மழையும், புதுவையில் லேசான மழையும் பெய்யக்கூடும்.
அதேபோல் வேலூர், திருவள்ளூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்ஸியசையும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்ஸியசையும் ஒட்டி பதிவாகக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே சென்னையில் இரு நாட்களாக வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. அவ்வபோது லேசான மழையும் பெய்து வருகிறது. அந்த வகையில் சென்னையில் நேற்று இரவு முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னையில் நேற்று இரவில் மட்டும் 17.9 மில்லிமீட்டர் மழை பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஆந்திர கடற்கரை மற்றும அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல், கேரளா, கர்நாடகா கடலோர பகுதிகள் மற்றும் லட்சத்தீவு, அந்தமான் கடல்பகுதிகளில் பலத்த காற்று வீசும் என்பதால் அங்கு மீனவர்கள் செல்லவேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
newstm.in