ரெயில் கட்டண உயர்வு அமலுக்கு வந்தது - புதிய கட்டணம் எவ்வளவு...?

ரெயில்வே துறையின் வளர்ச்சியை அடிப்படையாக கொண்டு அவ்வப்போது பல்வேறு புதிய மாற்றங்களை செய்து வருகிறது. இதில் ரெயில் டிக்கெட் கட்டண உயர்வும் ஒன்று. அந்த வகையில், கடந்த 2013-ம் ஆண்டு கிலோ மீட்டருக்கு 2 பைசா முதல் 10 பைசா வரை ரெயில் கட்டணம் உயர்த்தப்பட்டது. அப்போது, மின்சார ரெயில்களுக்கு 2 பைசாவும், மெமு மற்றும் எக்ஸ்பிரஸ் ரெயில்களுக்கு 4 பைசாவும், ஏ.சி. வகுப்பு பெட்டிகளுக்கு 6 முதல் 10 பைசா வரையிலும் கட்டணம் உயர்ந்தது.
அதன்பின்னர், 2020-ம் ஆண்டு ஜனவரி 1-ந் தேதி மீண்டும் ரெயில் கட்டணம் உயர்த்தப்பட்டது. அப்போது, 2-ம் வகுப்பு படுக்கை வசதிக்கு ஒரு கிலோ மீட்டருக்கு ஒரு பைசா உயர்ந்தது. ஏ.சி. வகுப்புகளில் ஏ.சி. சேர்கார், முதல் வகுப்பு முதல் 3-ம் வகுப்பு ஏ.சி. வகுப்புகளுக்கு கிலோ மீட்டருக்கு 4 பைசா வீதம் அதிகரிக்கப்பட்டது. இதற்கிடையே, கொரோனா பரவலால் நாடு முழுவதும் வர்த்தகம் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால், ரெயில் கட்டணத்தை உயர்த்துவது உள்ளிட்ட எந்த முடிவையும் ரெயில்வே வாரியம் எடுக்கவில்லை.
இதற்கிடையே, கடந்த மாதம் ரெயில் கட்டணத்தை உயர்த்துவது குறித்து மத்திய ரெயில்வே வாரியம் ஆலோசனை செய்தது. அப்போது, ஒரு கிலோ மீட்டருக்கு ஒரு ரூபாய் வீதம் உயர்த்தலாம் என்று பரிந்துரை செய்யப்பட்டது. இந்த பரிந்துரையின் அடிப்படையில் 5 ஆண்டுகளுக்கு பின்னர் இந்தியா முழுவதும் பயணிகள் ரெயில் கட்டணத்தை உயர்த்தி மத்திய ரெயில்வே வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதாவது, 500 கிலோ மீட்டருக்கு மேலான தூர பயணங்களுக்கு ரெயில் கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
இதுகுறித்து, மத்திய ரெயில்வே வாரியம் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-
புறநகர் மின்சார ரெயில்கள் மற்றும் மாதாந்திர சீசன் டிக்கெட்டுகளுக்கு எவ்வித மாற்றமும் இல்லை. முன்பதிவில்லா சாதாரண பெட்டிகளுக்கு 500 கிலோ மீட்டர் வரை கட்டண உயர்வு இல்லை. 501 கிலோ மீட்டரில் இருந்து 1,500 கிலோ மீட்டர் வரை ரூ.5-ம், 1,501 கிலோ மீட்டரில் இருந்து 2,500 கிலோ மீட்டர் வரையில் ரூ.10-ம், 2,501 கிலோ மீட்டரில் இருந்து 3,000 கிலோ மீட்டர் வரையில் ரூ.15-ம் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. படுக்கை வசதி கொண்ட பெட்டிகளுக்கும், முதல் வகுப்பு பெட்டிகளுக்கும் கிலோ மீட்டருக்கு ½ பைசா வீதம் உயர்த்தப்பட்டுள்ளது.
குளிர்சாதன வசதி இல்லாத மெயில், எக்ஸ்பிரஸ் ரெயில்களில் 2-ம் வகுப்பு படுக்கை வசதி கொண்ட பெட்டிகளுக்கு 500 கிலோ மீட்டருக்குள் இருந்தாலும் கட்டண உயர்வு கணக்கிடப்படும். அதன்படி கிலோ மீட்டருக்கு ஒரு பைசா உயர்த்தப்பட்டுள்ளது. மெயில், எக்ஸ்பிரஸ் ரெயில்களில் ஏ.சி. வசதியுடைய பெட்டிகளில் பயணம் செய்வதற்கு கிலோ மீட்டருக்கு 2 பைசா உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த மாற்றியமைக்கப்பட்ட ரெயில் கட்டணம் ராஜ்தானி, சதாப்தி, டொரண்டோ, வந்தே பாரத், அந்தியோதயா உள்பட பல்வேறு உயர் வகுப்பு மற்றும் சிறப்பு ரெயில்களுக்கும் பொருந்தும். அதேநேரத்தில், டிக்கெட் முன்பதிவுக்கான கட்டணம் உள்பட பிற கட்டணங்களில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை. விதிமுறைகளின்படி, ஜி.எஸ்.டி. வரி தொடர்ந்து விதிக்கப்படும்.
ஏற்கனவே உள்ள விதிமுறைகளின்படி கட்டணத்தில் வரும் பைசா முழுமையான ரூபாயாக கணக்கிடப்படும் (எடுத்துக்காட்டாக ரூ.1.80 பைசா வரும் பட்சத்தில் அது 2 ரூபாயாக கணக்கிடப்படும்). இந்த புதிய கட்டணம் இன்று முதல் முன்பதிவு செய்யும் டிக்கெட்டுகளுக்கு பொருந்தும். ஏற்கனவே டிக்கெட் முன்பதிவு செய்துள்ள பயணிகளுக்கு பழைய கட்டணமே வசூலிக்கப்படும். அதில் எந்த மாற்றமும் இல்லை. புதிய கட்டணங்களுக்கு ஏற்ற வகையில் டிக்கெட் முன்பதிவு மையங்கள், செயலிகள், டிக்கெட் கவுண்ட்டர்கள் மாற்றி அமைக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.