1. Home
  2. தமிழ்நாடு

ஏற்கெனவே ராகுல் சொன்னது தான்...விஜய் பேச்சில் புதிதாக ஏதுமில்லை - நாராயணசாமி..!

1

புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: அரசுத் திட்டங்கள் பட்டியலின மக்களுக்கு நேரடியாகச் சென்று சேரவில்லை என ஆளுநர் கூறியிருப்பது ஆட்சியாளர்கள் மீது அவருக்கு அதிருப்தி ஏற்பட்டுள்ளதையே வெளிப்படுத்துகிறது. அண்மையில் புதுச்சேரிக்கு வந்திருந்த மத்திய மின்துறை அமைச்சரிடம், புதுச்சேரி மின் துறையை தனியார்மயமாக்கக் கூடாது என முதல்வர் ரங்கசாமியும், மின்துறை அமைச்சர் நமச்சிவாயமும் வலியுறுத்தவில்லை.

மின்கட்டண உயர்வை திரும்பப் பெறுவதாக முதல்வர் அறிவித்தும், அவை செயல்படுத்தப்படவில்லை. இதன்மூலம் மின்துறையை தனியார்மயமாக்க அரசு வேகமாக செயல்படுகிறது என தெரிகிறது. இதனால் மின்துறை ஊழியர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர். பயன்படுத்திய மின்சாரத்துக்கு மட்டும் கட்டணம் வசூலிக்காமல் பல பெயர்களில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இது மக்களிடம் கொள்ளையடிப்பதற்கு சமம்.

புதுவை பாஜக தலைவர் செல்வகணபதி மீதான தமிழக சிபிசிஐடி போலீஸாரின் விசாரணை முடியும் வரை அவர் தனது கட்சிப் பதவி, மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளில் இருந்து விலகி இருக்கவேண்டும். தவெக முதல் மாநாடு நடத்திய விஜய்க்கு வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறோம். மாநாட்டில் அவர் எந்த புதிய கருத்தையும் தெரிவிக்கவில்லை. அனைத்து அரசியல் கட்சிகளும் கூறிவரும் மதவாத ஒழிப்பு, நீட் ஒழிப்பு, ஊழலற்ற நிர்வாகம் ஆகியவற்றைத்தான் கூறியுள்ளார்.

இவை எல்லாமே ஏற்கெனவே கடந்த 2 ஆண்டுகளாக ராகுல் காந்தி பல்வேறு கூட்டங்களில் பேசிவரும் கருத்துகள் தான். விஜய் புதிய அரசியல் பாதையை அமைப்பார் என எதிர்பார்த்தோம். ஆனால் அது இல்லை. இருப்பினும் பொறுத்திருந்து பார்க்க வேண்டும். இறுதி முடிவெடுக்க வேண்டியது மக்கள்தான் என்று நாராயணசாமி தெரிவித்தார்.

Trending News

Latest News

You May Like