அரசியலில் ஈடுபட முன்வருமாறு பெண்களுக்கு ராகுல் காந்தி அழைப்பு..!
ராகுல் காந்தி வெளியிட்டுள்ள எக்ஸ் சமூக வலைதளப் பதிவில் கூறியுள்ளதாவது:-
அரசியலில் பெண்களின் பங்களிப்பை அதிகரிப்பதற்காக ஓராண்டுக்கு முன், ‘இந்திரா உறுப்பினர் சேர்க்கை’ இயக்கத்தை ஆரம்பித்தோம். இன்று, இந்த முன்னெடுப்பு பெண்களின் தலைமைத்துவத்துக்கான சக்திவாய்ந்த இயக்கமாக வளர்ந்துள்ளது. உண்மையான சமத்துவத்தையும் நீதியையும் பெற்றிட, அரசியலில் பெண்கள் பலரது பங்களிப்பு தேவைப்படுகிறது. இதற்காக நாங்கள் தொடர்ந்து செயல்பட்டு வருகிறோம்.
யதார்த்தத்தில் மாற்றத்தை உருவாக்க விரும்பும் அனைத்து பெண்களும், ‘சக்தி அபியான்’ இயக்கத்தில் சேர வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இதன்மூலம், பெண்களை மையப்படுத்திய அரசியலில் சிறப்பாக செயலாற்றலாம். இதில் சேருவதன் மூலம், வலுவான அடித்தளத்தைக் கொண்ட அமைப்புகளை கட்டமைத்திட நீங்கள் பங்களிப்பீர்கள், அதன்மூலம் அர்த்தமுள்ள வகையில் மாற்றங்கள் நிகழும். கிராமங்களிலிருந்து – தேசம் வரை ஒட்டுமொத்தமாக நாம் ஒன்றிணைந்து மாற்றத்தை உருவாக்கலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
மேலும், காங்கிரஸின் சக்தி அபியான் இயக்கத்தில் சேர விரும்புவோருக்காக, https://www.shaktiabhiyan.in/ என்ற இணையதள முகவரியையும் இணைத்து பெண்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.