காயமடைந்த விவசாயியிடம் ராகுல் காந்தி தொலைபேசியில் ஆறுதல்..!
வேளாண் விளைபொருட்களின் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு உத்தரவாதம் அளிப்பது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி சலோ என்ற பெயரில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதில், அம்பாலா என்ற இடத்தின் அகருகே ஷம்பு எல்லைப் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீது போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். இதில், விவசாயிகள் கலைந்து ஓடினர். விவசாயிகள் தரப்பில் பலர் காயமடைந்தனர்.
இதே போன்று, போலீசாரை நோக்கி கற்களை வீசி எறிந்தனர். இதில், போலீசாரும் காயமடைந்தனர். இரு தரப்பினருக்கும் இடையில் நடந்த மோதலில், போலீசார் தரப்பில் துணை போலீஸ் சூப்பிரெண்டு உள்பட 24 பேரும், விவசாயிகள் தரப்பில் 60 பேரும் காயமடைந்து உள்ளனர்.
இந்நிலையில், டெல்லி பேரணியில் கலந்து கொண்டு, காயமடைந்த விவசாயி ஒருவரிடம் காங்கிரஸ் முன்னாள் தலைவரான ராகுல் காந்தி தொலைபேசி வாயிலாக நேற்று பேசினார். இதுபற்றி முன்னாள் ராணுவ வீரரான அந்த விவசாயியிடம் ராகுல் காந்தி பேசும் போது,
இது முற்றிலும் தவறு. நாங்கள் உங்களுடன் இருக்கிறோம். வருத்தப்படாதீர்கள் என கூறினார். நாட்டுக்கு முக்கியத்துவம் வாய்ந்த விவசாயத்திற்காக நீங்கள் போராடுகிறீர்கள். இதற்கு முன்பும் நாட்டுக்காக நீங்கள் உழைத்தீர்கள். இப்போதும் அதனை நன்றாக செய்து வருகிறீர்கள். அதிர்ஷ்டம் ஏற்படட்டும் என்று பேசியுள்ளார்.
இந்த உரையாடலின்போது, உங்களுக்கு உடலில் எந்த பகுதியிலெல்லாம் காயம் ஏற்பட்டது என்று விவசாயியிடம் ராகுல் காந்தி கேட்டறிந்து கொண்டார். போலீசாரின் நடவடிக்கையில் போராட்டத்தில் ஈடுபட்ட எத்தனை பேருக்கு காயம் ஏற்பட்டது என்றும் ராகுல் காந்தி கேட்டு தெரிந்து கொண்டார்.