1. Home
  2. தமிழ்நாடு

பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி சவால் : டிரம்ப் சொன்னது பொய் என்று உங்களால் சொல்ல முடியுமா?

1

பஹல்காம் தாக்குதல் மற்றும் ஆபரேஷன் சிந்தூர் குறித்து மக்களவையில் இரண்டாவது நாளாக விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தில் பங்கேற்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேசியதாவது:

வங்கதேச போரின்போது அமெரிக்க படைகளின் எச்சரிக்கையை மீறி பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. புதிய நாடு உருவானது. 1971 இல் இந்திய ராணுவத்துக்கு முழு சுதந்திரம் அளிக்கப்பட்டிருந்தது. ராணுவத்தை சரியாக பயன்படுத்தும் திறன் அப்போது இருந்தது.

ஆனால், ஆபரேஷன் சிந்தூரின் போது மத்திய அரசின் செயல்பாடுகள் விமானப் படைக்கு பின்னடைவாக அமைந்தன. இந்த நடவடிக்கையின் போது இந்திய விமானப் படை விமானங்கள் வீழ்த்தப்பட்டது உண்மையே. பாகிஸ்தான் வான் பாதுகாப்பு அமைப்பை தாக்க அறிவுறுத்தப்படாதது நமது விமானப் படைக்கே ஆபத்தாக அமைந்தது.

ஆபரேஷன் சிந்தூர் நடந்துக்கொண்டிருந்தபோதே பாகிஸ்தானை தொடர்பு கொண்டதாக பாதுகாப்புத் துறை அமைச்சர் நேற்று அவையில் கூறியதை கேட்டு அதிர்ச்சியடைந்தேன். இதன் மூலம் இந்தியாவின் வியூகங்களை பாகிஸ்தானிடம் முன்கூட்டியே சொல்லிவிட்டீர்கள். சண்டையை தீவிரப்படுத்த விரும்பவில்லை என்று கூறியது ஏன்?

சண்டை தொடங்கும்வரை பாகிஸ்தான் தான் எதிரி என்று இந்தியா நினைத்தது. ஆனால் சண்டை தொடங்கிய பிறகுதான் இந்தியாவின் உண்மையான எதிரி சீனா என்று தெரிய வந்தது. அந்த அளவுக்கு போர் தொடர்பான பல்வேறு முக்கிய தகவல்களை பாகிஸ்தானுக்கு சீனா அளித்து உதவியது.

பாகிஸ்தான் சீன விமானங்களை ஒருங்கிணைக்க ஒரு மையமே அங்கு இருக்கிறது. சீனாவும் பாகிஸ்தானும் ஒருங்கிணைவது இந்தியாவுக்கு ஆபத்தானது. ஆனால் நமது பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஒருமுறை கூட சீனா என்ற வார்த்தையை தமது உரையில் உச்சரிக்கவில்லை.

பிரதமரின் பிம்பத்தை காக்கவே இந்த முழு நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டது. தமது படையை பிரதமர் மோடி தவறாக பயன்படுத்துவது அபாயகரமானது. ஆபரேஷன் சிந்தூரின் போது இந்திய விமானப் படை வீரர்களின் கைகள் கட்டப்பட்டிருந்தன. ராணுவத்தின் கரங்களை பின்புறம் கட்டி வைக்காதீர்கள்.

இந்தியா -பாகிஸ்தான் இடையே நடைபெற்ற சண்டை தமது தலையீட்டால் தான் முடிவுக்கு வந்தது என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் 29 முறை கூறியுள்ளார். டிரம்ப் இவ்வாறு சொன்னது பொய் என்று மோடியால் சொல்ல முடியுமா? டிரம்ப் ஒரு பொய்யர் என்று நாடாளுமன்றத்தில் கூற மோடிக்கு தைரியம் உள்ளதா?

பஹல்காம் தாக்குதலுக்கு காரணமான, பாகிஸ்தான் ராணுவ தளபதி அசீம் முனீருக்கு சண்டையை நிறுத்தியதற்காக டிரம்ப் நன்றி கூறினார். அவருக்கு டிரம்ப் விருந்தளித்தார். சண்டையை அசீம் முனீர் துண்டியதாக பாஜக கூறிவரும் நிலையில், டிரம்ப் அவருக்கு நன்றி தெரிவித்திருந்தார்.

ஒரு இக்கட்டான சூழலை எப்படி கையாளுவது என்று தெரியாமல் இந்த அரசு உள்ளது. போரின் அடிப்படையே நமது பாதுகாப்புத் துறை அமைச்சருக்கு தெரியவில்லை என்று ராகுல் காந்தி பேசினார்.

Trending News

Latest News

You May Like