இன்றும் ரசிகர்களின் மனதில் வாழும் ரகுவரன் பிறந்தநாள்!
தமிழ் சினிமாவில் ஹீரோவாக வாய்ப்புக் கேட்டு வருபவர்களுக்கு பெரும்பாலும் ரஜினி - கமல் இன்ஸிபிரேஷனாக இருந்திருப்பார்கள். ஆனால் வில்லனாக வேண்டும் என விரும்புபவர்களுக்கு நிச்சயம் நடிகர் ரகுவரன் தான் முன்னுதாரணமாக இருப்பார். தன் குரலாலேயே ரசிகர்களை மிரட்டியவர்.
தரமணியின் முக்கிய அடையாளம் திரைப்படக் கல்லூரி. அந்தத் திரைப்படக் கல்லூரி நிறைய திரை ஜாம்பவன்களைக் கொடுத்துள்ளது. அதில் மிக முக்கியமானவர் நடிகர் ரகுவரன். திரைப்படக் கல்லூரியின் கன்சல்டன்ட் பேராசிரியராக இருந்தவர் ஹரிஹரன். புனே திரைப்படக் கல்லூரியில் இயக்கம் பயின்ற அவர், தனது இரண்டாவது படமான 'ஏழாவது மனிதனை' இயக்கும் முயற்சியில் இருந்தார். அப்போது அதில் ஹீரோவாக நடிக்கும் வாய்ப்பை தனது மாணவர்களில் ஒருவருக்குக் கொடுக்க எண்ணினார். அதனால் வகுப்பு முடிந்து போகும் ஒவ்வொரு மாணவரையும் அவர் கூர்ந்து கண்காணிப்பார். அப்போது தான் 6.3 அடி உயரம் கொண்ட ரகுவரனை கண்டெடுத்தார்.
தொழிற்சாலைக் கழிவுகளின் கேடுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய அந்தப் படம் பல விருதுகளை வென்றது. பிறகு சி.வி. ஶ்ரீதரின் இயக்கத்தில் உருவான 'ஒரு ஓடை நதியாகிறது' எனும் படத்தில் சுமலதாவுக்கு ஜோடியாக நடித்தார். பின்னர் வி.சி. குகநாதன் இயக்கத்தில் 'நீ தொடும் போது' என்ற படத்தில் நடித்தார். ஆனால் இவ்விரு படங்களும் வணிக ரீதியாக பெரும் வெற்றி பெறவில்லை. பின்பு எஸ்.பி. முத்துராமனின் இயக்கத்தில் வெளிவந்த 'ஒரு மனிதனின் கதை' என்ற தொலைக்காட்சித் தொடரில் நடித்தார் ரகுவரன். இது மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. பின்னர் 'சில்க் சில்க் சில்க்' எனும் படத்தில் ஒரு எதிர்மறையான கேரக்டரில் துணிச்சலாக நடித்தார். அப்போது தான் ரகுவரனை, வில்லனாக்கி அழகு பார்க்க முடிவெடுத்தது தமிழ் சினிமா.
விசுவின் 'சம்சாரம் அது மின்சாரம்' என்ற படத்தில் சிதம்பரம் என்ற கதா பாத்திரத்தில் சிக்கன பேர்வழியாக சப்போர்டிங் ரோலில் நடித்தார். இதுவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதன்பிறகு வந்த மந்திரப் புன்னகை எனும் படத்தில் வில்லனாக இருந்து ஹீரோவான சத்யராஜுக்கு, ஹீரோவாக இருந்த ரகுவரன் வில்லனாக நடித்திருப்பார். தொடர்ந்து ரஜினியுடன் 'ஊர்க்காவலன்' படத்தில் மீண்டும் வில்லன் வேடம். வில்லன் என்றாலே கட்டுமஸ்தான உடலுடன் காதைப் பிளக்கும் குரலுடன் கோர முகத்துடன் தான் இருக்க வேண்டும் என்ற டிரெண்டை மாற்றி, ஒல்லியான உடலமைப்பில் மெல்லியக் குரலோடும் வில்லனிசத்தைக் கொண்டு வந்தவர் ரகுவரன்.
பிறகு ஆர்.சி. சக்தியின் இயக்கத்தில் வெளிவந்த 'கூட்டுபுழுக்கள்' படத்தில் வேலையில்லாத நடுத்தரவர்கத்து இளைஞனாக நடித்தார். அதில் இயலாமை, கோபம், ஏக்கம், கையறுநிலை, காதல் ஆகிய நுண்ணுணர்வுகளை ரகுவரன் தனது உடல்மொழியின் வழியாக வெளிப்படுத்திய விதம் கதாபாத்திரத்துக்கு மிகவும் நேர்மையாகவும் நெருக்கமாகவும் இருக்கும். ஒருபுறம் வில்லனாகவும் மறுபுறம் குணச்சித்திர வேடங்களிலும் கவனம் செலுத்திய போது, அவரின் கால்சீட்டுக்கள் நிரம்பி வழிந்தன.
குறிப்பாக இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமாரின் 'புரியாத புதிர்' திரைப்படத்தின் காட்டுமிராண்டி கணவனாக 'ஐ நோ, ஐ நோ' எனும் வசனத்தாலேயே மிரட்டியிருப்பார். மேலும் இவர்கள் வருங்கால தூண்கள் எனும் படத்தில் போதைக்கு அடிமையான கல்லூரி மணவனாக தத்ரூபமாக நடித்து 'அப்ளாஸ்' வாங்கியிருப்பார்.
வில்லன், குனச்சித்திரம் என மாறி மாறி நடித்த ரகுவரனை, மணிரத்தினம் தனது அஞ்சலி படத்தில் குணச்சித்திர வேடத்தில் ஹீரோவாக நடிக்க வைத்தார். சேகர் என்ற கேரக்டரில் பிரமாதமாக தனது நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். 'காதலனில்' மல்லிகார்ஜுனாவாக கலக்கியவர் அடுத்து நடித்தது பாட்ஷா.
தமிழ் திரையுலகம் மறக்கவே முடியாத சில கதா பாத்திரங்களுள் 'ஆண்டனி'யும் ஒன்றாகிப் போனது. இன்று வில்லனாக நடிக்க ஆசைப்படும் பலரும் ரகுவரனையும் ஆண்டனியையும் தான் இன்ஸிபிரேஷனாக எடுத்துக் கொள்கிறார்கள். ஆண்டனி... மார்க் ஆண்டனி என்று ரகுவரன் தன்னுடைய பெயரை சொல்லும் ஸ்டைலே தனி. 'இப்படி ஒரு அப்பா இருந்தா எப்படி இருக்கும்' என்று ஏங்கும் அளவுக்கு, 'லவ் டுடே' படத்தில் அன்பான அப்பாவாக நடித்திருப்பார். 'நேருக்கு நேர், நிலாவே வா, அமர்க்களம்' என தொடர்ந்து குணச்சித்திர வேடங்களில் நடித்தவர், 'அரங்கநாதனாக' முதல்வனில் மிரட்டினார். எப்படி யோசித்துப் பார்த்தாலும் அந்த கதா பாத்திரத்தை வேறு எவராலும் அவ்வளவு சிறப்பாக செய்திருக்க முடியாது என்று தான் தோன்றுகிறது. அதற்காக தமிழக அரசின் 'சிறந்த வில்லனுக்கான' விருதையும் பெற்றார்.
முதல்வனுக்குப் பிறகு 'ஸ்டார்' படத்தில் மட்டுமே வில்லனாக நடித்தவர் தொடர்ந்து குணச்சித்திர வேடங்களை மட்டும் ஏற்று நடித்தார். கடைசியாக அவர் நடித்த 'யாரடி நீ மோகினி' படத்தில் கூட மகனின் தவறுகளை சுட்டிக் காட்டும் பொறுப்பான தந்தை வேடத்தில் நடித்திருப்பார். அவரின் ஒவ்வொரு கேரக்டரையும் தனித்தனி கட்டுரையாக எழுதுமளவுக்கு விஷயங்கள் கொட்டிக் கிடக்கின்றன. படிக்கும்போதே ரகுவரனுக்கு கிடார் வாசிக்கப் பிடிக்கும். நேரம் கிடைக்கும் போதெல்லாம் தானே எழுதி, பாடி, இசையமைத்தார். அப்படி அவர் இசையமைத்த 6 பாடல்கள் கொண்ட ஒரு ஆல்பத்தினை சமீபத்தில் ரஜினிகாந்த் வெளியிட்டு, அதனை ரகுவரனின் மனைவி ரோகினியும், மகன் ரிஷியும் பெற்றுக் கொண்டனர்.
நடை, உடை, பாவனை, பேச்சு என ரகுவரனின் ஒவ்வொரு விஷயமும் தனித்துவமானது தான். அவரின் குரலைப் பேசாத மிமிக்கிரி ஆர்டிஸ்டுகளே இல்லை. வில்லனாக இருக்கும் ஒருவரை சப்போர்டிங்காகவும், குணச்சித்திர வேடத்தில் நடிக்கும் ஒருவரை வில்லனாகவும் அவ்வளவு எளிதில் ரசிகர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். ஆனால் இந்த விதி ரகுவரனுக்குப் பொருந்தவில்லை. ஆனால் இந்தக் காலம் தான் எத்தனைக் கொடுமையானது, இவ்வளவு சீக்கிரம் நம்மிடமிருந்து அவரை பிரித்து விட்டது. இன்று அவர் உயிருடன் இருந்திருந்தால் அவரது 60-வது பிறந்தாளை முன்னிட்டு மணிவிழா கொண்டாடியிருப்பார்.
மீண்டும் ஒரு ஆண்டனியோ, அரங்கநாதனோ, சிதம்பரமோ, சந்திர சேகரோ, துளசி தாஸோ நிச்சயம் தமிழ் சினிமாவுக்கு கிடைக்க மாட்டார்கள். ஏனென்றால் அந்தக் கதாப்பாத்திரங்களில் ரகுவரன் நடிக்கவில்லை வாழ்ந்திருப்பார். வி மிஸ் யூ ரகுவரன் சார்...
newstm.in