சைடிஷ் வாங்கித் தராததால் ஆத்திரம்... ரவுடி கொலை!!
திருவள்ளூர் மாவட்டம் செவ்வாப்பேட்டை அடுத்த தொட்டிக்கலை பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி வேலு, அப்பகுதியில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் தனது நண்பர்களான செல்வா, கோகுல், ஸ்டாலின் ஆகியோருடன் ஒன்றாக மது அருந்தியுள்ளார்.
அப்போது மூவரும் சேர்ந்து ரவுடி வேலுவிடம் அருகில் உள்ள கடையில் சைடிஷ் போட்டி தரக்கோரி கேட்டதாக கூறப்படுகிறது. வேலு வாங்கித்தர மறுத்ததாக தெரிகிறது. இதனால் அவரை மூவரும் தரக்குறைவாக பேசியுள்ளனர். இதனால், ஆத்திரம் அடைந்து வேலு அவர்களை அடிக்க தொடங்கியுள்ளார்.
இதனால், ஆத்திரம் அடைந்த நண்பர்கள் மூவரும் சேர்ந்து, வேலுவை சரமாரியாக வெட்டிவிட்டு அங்கு இருந்து தப்பிச் சென்றனர். கொலையுண்ட வேலு மீது, ஏற்கனவே வில்லிவாக்கம் காவல் நிலையத்தில் 2 கொலை வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. அதேபோன்று கொலை செய்த செல்வா என்பவர் மீது செவ்வாப்பேட்டை காவல் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் உள்ளது.
வேலு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு நண்பர்களுடன் இணைந்து இரண்டு கொலைகளை செய்துவிட்டு பிணையில் வெளியே வந்து திருந்தி வாழ்ந்து வந்துள்ளார். இந்தக் கொலை உண்மையாகவே குடிபோதையில் நண்பர்களால் செய்யப்பட்டதா, அல்லது முன்விரோதமா என்று போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வேலுவின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். நண்பரை கொலை செய்துவிட்டு தப்பி ஓடிய மூவர் மீது செவ்வாப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.
newstm.in